பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சமுதாய வளர்ச்சிக்குப் பயன்படுத்தினால் நல்லது என்ற கருத்திலேயே இந்தத் தலைப்பு எடுத்துக் கொள்ளப்பெற்றது. இவ்விரு தத்துவங்களுக்கிடையே ஒருமை நிலை தோன்றாது போனாலும், இவற்றைப் பின்பற்றுபவர்களுக்கு மதிப்பு உணர்வுடன் ஆய்வு செய்யும் மனப்போக்கு வளர்ந்தால் பகைமையாவது குறையுமல்லவா?

சைவ சித்தாந்தம்

சைவ சிததாந்தம் என்கிற செழுந்தமிழ் வழக்கு நெறி வரலாற்றுக் காலத்திற்கு முன்பே தமிழர் வாழ்வில் தோன்றி வளர்ந்து வந்துள்ள நெறியாகும். “சைவத்தின் பழைமை கற்காலத்திற்கும் முற்பட்டது. இப்பொழுது உலகிற் காணப்படும் சமயங்கள் எல்லாவற்றிற்கும் அது முற்பட்டது.”1 என்று சர். ஜான்மார்ஷல் என்ற அறிஞர் கூறியுள்ளார். சிந்து வெளியில் அகழ்ந்தெடுக்கப் பெற்ற பொருள்களில் சிவலிங்கங்களும் உண்டு. சங்ககாலத் தமிழர்களின் சமயமும் சைவ சித்தாந்தமேயாம். வைணவமும் தமிழர் நெறியே. வைணவமும் சங்க காலத்தில் நிலவிய சமயமே. ஆயினும் சங்க இலக்கியங்களில் சைவ சித்தாந்தத் தத்துவக் கொள்கைகள் பரவலாகப் பேசப் பெற்றுள்ளன. சங்க இலக்கியங்களில் பெரும்பான்மை சிவ பரம்பொருளையே வாழ்த்துகின்றன. சிவனே கடவுள்; அவன் பிறப்பு இறப்பு இல்லாத நிலைத் தன்மையுடையவன் என்பதனை ஒளவையார்,

“..... ....... ........ .........
பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி
நீலமணி மிடற் றொருவன் போல
மன்னுக”2

என்று கூறியுள்ளதால் அறியலாம்.