பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

274

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


செயற்கரிய செய்கைகளைச் செய்தன. அத்தகு செயற்கரிய செயல்களைச் செய்த திருமுறைகளால் அருச்சனை செய்தால் எண்ணிய பயனை எய்த முடியும்.

வினாவும் விடையும்

1. தாய்மொழி வழிபாட்டுக் கொள்கையை மொழி விருப்பு வெறுப்பின்பாற்பட்ட கொள்கை, எனச் சிலர் கருதுகிறார்கள். தாய்மொழியில் வழிபாட்டுக் கொள்கை, மொழிவழி தோன்றியதல்ல. வழிபாடு நெஞ்சு கலந்ததாக இருந்து பூரணப் பயனைத்தர வேண்டும் என்ற வழிபாட்டு வழித்தோன்றிய கருத்தே. நமக்குத் தமிழில்தான் செய்ய வேண்டும் என்ற கொள்கை இல்லை. எம்மொழியிலும் வணங்கலாம். எல்லா மொழியாலும் தேவர்கள் இறைவனைத் துதித்ததாகத் திருஞான சம்பந்தர் தேவாரம் பேசுகிறது. ஆதலால் பல மொழிகளில் வழிபாடு செய்யலாம் என்று சொல்வதினால் மொழிவெறி உண்டாகாது. வடமொழியில் தான் வழிபடலாம் பிற மொழியில் கூடாதென்று சொல்லும் பொழுதே மொழிவெறி எனக்கருத முடிகிறது.

2. இப்படி மொழிவழிப்பட்ட எண்ணங்களினால் மக்களிடையே பிரிவினை சக்தி வளர்ந்து பிளவுகள் ஏற்படும் என்று சிலர் கருதுகிறார்கள். அதுவும் உண்மையல்ல. தன்மொழி மீது விருப்பும் பிறமொழியின் மீது வெறுப்புக் காட்டும் பொழுதே பிரிவினை தோன்றும்; பிளவுகளும் உருவாகும். அவரவர் தாய்மொழியில் அவரவர் விரும்புகிற வண்ணம் அருச்சனை செய்யலாம் என்று சொல்வதினால் பிரிவினையும் பிளவும் தோன்றுகிறதில்லை. இந்தியப் பேரரசு நாட்டின் ஆட்சிக்கென்று ஒரு பொது மொழியைத் தேர்ந்தெடுத்தாலும், அந்தந்த மாநிலங்களின் தேசீய மொழிகள் அந்த மாநிலங்களின் ஆட்சி மொழியாக ஆக்கியதின் மூலம் இந்தியாவின் ஒற்றுமையை உருவாக்க