பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆசீர்வாதப் பேருரை

283


சடப்பொருள் தானாகத் தொழிற்பட முடியாது. மண் தானே தன் வடிவத்தைக் குடமாக மாற்றிக் கொள்ள மாட்டாது. அதனை அவ்வாறு மாற்றக் குயவனொருவன் வேண்டும். அவ்வாறே உலகின் காரண வடிவத்தைக் காரிய வடிவமாக மாற்றுவதற்கும், அவ்வடிவில் அதனை வளர்ப்பதற்கும், மீள அதனைக் காரண வடிவமாக ஒடுக்குவதற்கும் சேதனனாகிய கர்த்தா ஒருவன் வேண்டும். இக்கருத்துப் பற்றியே மெய்கண்டாரும்.

“அவன் அவள் அது எனும் அவைமூவினைமையின்
தோற்றிய திதியே ஒடுங்கிமலத்துளதாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர்”

என்ற முதற் சூத்திரத்தில், அவை தோன்றிய என்னாது, ‘அவை தோற்றிய’ என்று பிறவினையில் ஓதியருளினர். உலகிற்கு முதற்காரணம் மாயை. மாயை என்ற சொல்லில் மா தோற்றத்தையும், யா ஒடுக்கத்தையும், உணர்த்தும். இங்ஙனம் முத்தொழிற்படுகின்ற உலகிற்குச் சர்வசங்காரனே கர்த்தா, அக்கர்த்தாவே அரன் அவனையே, சைவ சாத்திரம், அந்தம் ஆதி என்று பேசுகிறது. “அந்த மென்பது அந்தமாகிய ஒடுக்கத்தைச் செய்யும் அரன் என்பதையும், ஆதி என்பது அவனே முதன்மையுடையவன் என்பதையும் உணர்த்தும்.

உயிரியல்பு

உயிர்கள் எண்ணிறந்தன. நித்தியத்தன்மை உடையன. உயிர்கள் அநாதியே, பாசச் சார்புடையன. உயிர்களை அநாதியே பந்தித்திருப்பது ஆணவமாம். வியாபமாய் உள்ள உயிரை அணுத்தன்மை அடையச் செய்வதாலே ஆணவம் எனப்படும். இப்பாசத் தொடர்பிலிருந்து விடுதலை பெற்றுத் திருவருள் இன்பத்தை நுகர்ந்து இன்புறுதலே உயிர்களின் இறுதி நிலையாகும். இந்த நிலையையே ‘பேரா இயற்கை’ என்பர் வள்ளுவர். சைவப் பெருநூல்கள் திருவடிப் பேறு