பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

292

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சமயம். விலங்கு நீர்மை பொருந்திய பொல்லாத புல்லிய உணர்ச்சிகளினின்றும் விலக்கி, பூரண மனிதப் பண்பை நல்கி அருள் உள்ளத்தைக் கொடுப்பது சமயம்! மகவெனப் பல்லுயிரையும் ஒக்கவே பார்க்கும் பண்பைக் கொடுப்பது சமயம்! ஏன்? “காக்கை குருவி எங்கள் சாதி” என்ற பேருணர்வைக் கொடுப்பதும் சமயமே? வாழ்க்கையை வளம் படுத்துவது நல்லெண்ணங்கள். தனி மனிதனின் வாழ்வைச் செம்மைப்படுத்துவது சிந்தனையும் செயலுமாம். சமுதாயத்தைச் சீர்படுத்துவது தனி மனிதனது ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை. தனி மனிதனது ஒழுக்கம் குலையுமானால் சமுதாயம் குலைந்துவிடும். அதனால் குற்றங்கள் நிறைந்து கொலைகள் பெருகும். உறுப்பாலே மக்கள்; வாழ்க்கையாலே விலங்குகள் என்றாகிவிடுவர். எனவே நாட்டின் நல்வாழ்வு, சமுதாயத்தின் சிறப்பு எல்லாவற்றிற்கும் அடிப்படை தனி மனிதனின் ஒழுக்கம் பொருந்திய வாழ்வுதான். அப்படியானால் வேண்டுவது ஒழுக்கம்தானே! அது இருந்தால் போதாதா? என்று சிலர் கேட்கலாம். சமயச் சார்போடு வளர்கின்ற ஒழுக்கம்தான் நிலைத்து நிற்கும். சமயச் சார்பற்ற-கடவுள் நம்பிக்கையற்றவர்களின் ஒழுக்கம் என்றும் நிலைத்திருக்காது. குறிப்பாகச் சமயச்சார்பற்றவர்களின் ஒழுக்க நெறி ஊற்றில்லா ஒடை போன்றது; வேரில்லா மரம் போன்றது என்று கூறிவிடலாம். அதாவது வாழ்க்கையின் தேவை நிறைந்திருக்கிற வரையில்-இன்பம் பொருந்தியிருக்கின்ற அளவில் சமயச் சார்பற்றவர்களின் ஒழுக்கம் நிலைபெற்றிருக்கும். ஆனால் தேவை நிறைவு பெறாதபோது, வாழ்க்கையில் துன்பப் புயல் சுழன்றடிக்கின்றபோது, துன்பச் சுழலினின்றும் விடுதலை பெற்றுத் தேவையை நிறைவு செய்துகொண்டு இன்பத்திற் பொருந்தி வாழ்வதற்காகத் தாம் கொண்ட ஒழுக்க நெறியினின்றும் நழுவுவர். அப்படி நழுவ நேரிடும் காலத்துச் சிலகால வாழ்வுக்கு நீதியையும் நேர்மையையும் பலிகொடுக்காதே. அநீதிக்குத் தண்டனை