பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தலைமையுரை

295


சமய வாழ்வினையும், வழிபாட்டினையும் இழித்து எள்ளிப் பேசத் தலைப்பட்டனர். இவ்வியக்கம் சாதி ஒழிப்பியக்கமாகத் தோன்றி சமய ஒழிப்பியக்கமாக மாறிவிட்டது. மூலை முடுக்குகளில் எல்லாம் நாத்திகம் பரப்பப் பெற்றது. சிறந்த இலட்சிய நெறியினின்று வாழ்ந்த பெருமக்களின் வரலாற்றினை இன்பத் தமிழில் பக்திச் சுவை நனி சொட்டச்சொட்ட பாடித்தந்த சேக்கிழார் பெருமான் எள்ளப் பெற்றார். அவர் தம் திருநூல் எரிக்கு இரையாக்கப்பட்ட வேண்டுமென்று பேசப்பெற்றது. அது போலவே ஊனினை உருக்கி உயிரையும் உருக்கி உலப்பிலா ஆனந்தத்தைக் கொடுக்கும் அருமைத் திருவாசகத்திற்கும் எரியிட வேண்டுமென்று ஆர்ப்பரித்தார்கள். தமிழ் நாட்டின் ஒரு சில ஆலயங்களில் சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேற்றுமையின் காரணமாக தகாத செயல்களையும் செய்யத் தலைப்பட்டனர். செய்தும்விட்டனர். எனினும் கவலைப்படுவார் யாருமில்லாத கதியற்ற நிலை சைவத்துக்கு இருந்து கொண்டிருந்தது. இந்த நிலை இன்றும் மாறவில்லை என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது. இன்றும் பிற சமயத்தினரின் சமயப் பரப்பு வேலை துரிதமாக, நடந்து கொண்டிருக்கிறது. நாத்திகர்களும் பெருகி உருவங்களை உடைப்பதும் திருமுறைகளைத் தீயில் இடுவதும் எங்கள் இலட்சியம் என்று ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்றனர். நாடாளும் அரசோ மதச் சார்பற்ற அரசு என்ற பேரில் இருக்கிறது. ஆதலால் இவை தம்மை எதிர்த்து நிற்பதில் அது நேரடியாகத் தலையிட முடியாது. இந்த நிலை சமயப்பற்றுள்ள ஒவ்வொருவருக்கும், சமயச் சான்றோர்களுக்கும், சமயத் தலைவர்களுக்கும் ஒரு சோதனை. இது கடைசி நேரம். இனியும் உறங்கினால் கடமையினின்று தவறியவர்கள் ஆகிவிடுவோம். இடம் பொருள் ஏவல் இருந்தும் இழக்கமுடியாத கொள்கையினை இழந்துவிட்டோம் என்ற பழிச் சொல்லுக்கு உரியவர்கள் ஆகிவிடுவோம். அன்புடைய பெருமக்களே! இதனைச்