பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

327


ஆதலால், இனவழிப்பட்ட அன்பும் செழித்து வளரவில்லை. ஒரு தமிழன் இன்னொரு தமிழனை வெறுத்துப் பகை கொண்டு ஏசுவதைக் கேட்கின்றோம். அவன் வாழ்க்கைக் குட்பட்டு சூழ்ந்து தீமை செய்வதைக் காண்கின்றோமே! பகுத்தறிவுவாதிகளின் அமைப்புங்கூட உடைந்துவிட்டதே. இனவழி அன்பு என்று பேசத் தொடங்கிய ஐம்பதாண்டுகளுக்குள் எத்தனை உடைசல்கள். எண்ணிக்காட்ட வேண்டுமா? இல்லை. எண்ணிக்காட்ட இதயம் கல்லாக இல்லை. இனவழிப்பட்ட அன்புக்கு, உறவுக்கு நம்முடைய தலைமுறையில் வாழ்ந்த அமரர் பேரறிஞர் அண்ணா ஒரு விழுமிய எடுத்துக்காட்டு.

ஆதலால், இனவழி அன்பும் முழுமையாக வளர்ந்து விடவில்லை. நாமேகூட இனவழி அன்பைப் பலரிடத்தில் பெற முடியவில்லை. ஆனால், அவர்கள் இன வழிப்பட்ட அமைப்புக்களில் விளங்குகின்றனர். இந்த முரண்பாடு ஏன்? தமிழினம்- கொள்கை, கோட்பாடு, கட்சி, சமயம் இவற்றை மறந்து இனவழிப்பட்ட அன்பைக் காட்டக் கற்றுக் கொள்ள வேண்டும், வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்படி இனவழிப்பட்ட அன்பில் தமிழினம் வளர்வது மற்ற இனங்களின் வளர்ச்சிக்கு எதிராக அல்ல. எந்த ஒரு இனமும் பிறிதோரினத்தைத் தாழ்த்தி வளர்ந்துவிட முடியாது. அப்படி வளரும் வளர்ச்சியும் நிலையானதல்ல. அமுக்கப்படுகிற இனம் என்றாவது ஒரு நாள் எழுந்தே தீரும். அப்பொழுது அமுக்கிய இனத்தின் வரலாறு துன்பமாக முடியும்.

ஆதலால், தமிழினம் இந்திய இனங்களோடு ஒருங்கிணைந்து வாழ விரும்புகிறது. உலக இனங்களோடு உறவு கொள்ள விரும்புகிறது.

ஓருலக அமைப்பிற்குத் தமிழினம் என்றும் துணை நிற்கும். ஆனால், தமிழினத்தின் தன்மையை அஃது என்றும் இழக்காது. இழக்கக் கூடாது.