பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனை மலர்கள்

333


தேவைகளும் உண்டு. உடலை இயக்கி உயிர் பயன்பெறுதலும் உண்டு. உயிரை இயக்கி உடல் பயன்பெறுதலும் உண்டு. வாழ்க்கை முழுமைபெற முதல் தேவை உடல் தேவை. வாழ்க்கையின் முடிவுநிலை உயிர்க்கு ஊதியமாகிய இன்ப அன்பினை எய்துதல்.

“பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை”

என்பது வள்ளுவம். பொருள், உடற்சார்புடையது. அருள், உயிர்ச் சார்புடையது. பொருள் நலம் பெறாத உடலியல் வாழ்க்கை வளமாக இருத்தல் இயலாது. உடலியல் வாழ்க்கை வளமாக அமையாத நிலையில் உயிர்நலமாகிய அருள்நலமும் சிறத்தல் இயலாது. பொருள்நலம் சிறந்தாலும் அருள்நலம் இல்லாது போயின் வாழ்க்கை வீணாகும். உடலியல் வாழ்க்கைக்குரிய பொருள்நலப் பேற்றுக்கு அறிவியல் அடிப்படை நம்மைச் சுற்றியுள்ள வான், மண், வளி, ஒளி, நீர் ஆகியவற்றை நல்வாழ்க்கைக்குரியவாறு பயன்படுத்தத் துணை செய்வது அறிவியல்; உடல்-உயிர்க் கூட்டு வாழ்க்கைக்குரிய நுகர் பொருள்களைப் படைத்தும் காத்தும் வகுத்தும் பயன்படுத்தத் துணை செய்வது அறிவியல். ஐம் பூதங்களின் மீது பெற்ற வெற்றியை மானிடத்திற்கு நன்மை செய்யத் தக்கவகையில் ஆற்றுப்படுத்துவது ஆன்மிகம். அறிவியலுக்கும்கூட ஆன்மவியலே அடிப்படையாக இருக்கிறது. ஆன்மாவின் அறிவில் தோன்றும் செய்திகளை அனுபவத்திற்குக் கொண்டு வரத் துணைசெய்வது அறிவியல். ஞானத்தின் விரிவுகளுள் ஒருபகுதியே விஞ்ஞானம். ஞானம் என்ற அறிவு, உலகியலைச் சார்ந்து-பூத பெளதிகவியலைச் சார்ந்து இயங்கிப் பயன்படும் பொழுது விஞ்ஞானம் அல்லது அறிவியல் என்று பெயர் பெறுகிறது. ஆன்மாவின் அறிவு, உடற்சார்புடையதாகவும் தற்சார்புடையதாவும் அமையும் பொழுது தரப்பாடு குறைந்த ஆன்மஞானமாகிறது. இதை ஆன்மஞானம் என்று யாரும் ஒத்துக் கொள்ளவில்லை. “பசுஞானம்” என்று சித்தாந்த நூல்கள் கூறும்.