பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

23



ஆதலால், தமிழர் நோக்கில் குறிப்பாகச் சைவ வைணவ சமய நோக்கில், திருக்கோயில்கள் கடவுள் எழுந்தருளியிருக்கும் இடங்கள் மட்டுமல்ல, சமுதாய மையங்கள்! சமுதாயத்தின் இயக்கம்! இதனாலேயே திருக்கோயில்களுக்குச் சிறப்பு வந்தடைந்தது. திருக்கோயில்களிடத்து மக்கள் அளவற்ற நம்பிக்கை வைத்தனர். அளவற்ற கொடைகளை வழங்கித் திருக்கோயில்களைச் சார்ந்த அறக்கட்டளைகளின் முதலீட்டைப் பெருக்கினர். முடியுடை அரசர்கள் நிவந்தங்கள் வழங்கினர்; இறையிலிநிலங்களை வழங்கினர். திருக்கோயில் பத்திமையின் விளைநிலம்! திருக்கோயில் வாழ்க்கைக்குக் காப்புறுதி வழங்கிய முறை மன்றம்! தமிழ்நாட்டு வரலாற்றில் திருக்கோயில் ஏற்ற பங்கு அளவற்றது! காலத்தை வென்று நிற்கக்கூடியது! இன்றும் நெறியல்லா நெறியிற் செல்லும் தமிழகம், நெறிப்பட நின்று நேர்பட ஒழுக விரும்பின் திருக்கோயில் சார்பே தேவை. திருக்கோயில் சமுதாய இயக்கத்தை ஏற்றுக் கொண்டிருக்கிற பாங்கின் அடிப்படையில்தான் “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற மூதுரை பிறந்தது.

சமுதாய மையம்

தமிழ்நாட்டில் நகர அமைப்பு, சிற்றுார் அமைப்பு முறை வளர்ந்த ஒன்று! நடுவூரில் திருக்கோயில் உயர்ந்து விளங்கும்! திருக்கோயிலைச் சுற்றி நான்கு புறமும் மக்கள் சூழ்ந்து வாழ்வர். நான்கு திசைகளிலிருந்தும் மக்கள் திருக்கோயிலுக்குள் வந்து குழும, நான்கு திசைகளிலும் பெரிய வாயில்கள்! ஊர் முழுதும் ஒலித்து அழைக்கும். மணிகள். இஃதோர் அற்புதமான அமைப்பு! மாலை நேரத்தில் ஊர் மக்கள் அனைவரும் தத்தம் குடும்பத்தினருடன் அணி பெற ஆலயத்திற்கு வருதலும், வணங்கி மகிழ்தலும் சிறந்த காட்சி! இறைமை வழிபாடு முடிந்தவுடன் இங்குமங்குமாகத் தனித் தனியாகவும் கூட்டாகவும் ஒருவர் மற்றவரை நலம்