பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனை மலர்கள்

345



நாள்தோறும் காலையில் நல்ல பண் பொருந்திய பாடல்களைப் பாடிப் பத்திமை உணர்வில் திளைப்பது கலைமகள் வழிபாடு. அல்லது, நல்ல இசைப்பாடல்களைக் கேட்டு அனுபவிப்பது சிறந்த கலைமகள் வழிபாடு ஆகும்.

அடுத்து, நாடகம்! நாடகம் நாட்டைத் தன்னகத்தே கொண்டது. அதாவது நாட்டு மக்களை ஈர்த்துத் தன்பால் அணைப்பது நாடகம். நாம் ஒவ்வொருவரும் அன்றாட வாழ்க்கையில் மற்றவர்களுக்கு மகிழ்வூட்டி, அவர்களை நமக்கு வேண்டியவர்களாக - நம்பால் விருப்பம் உள்ளவர்களாக - அமைத்துக் கொள்ளும் முயற்சியும் ஒரு கலைதான்! இப்பண்பு, நாடகக் கலையைச் சார்ந்தது! நாள்தோறும் காலையில் எழுந்தது முதல், வணங்கிய கைகளும், இனிய சொற்களும். முகத்தில் படரும் புன்முறுவல் தாங்கிப் பழகுதல், அவரவர் நிலைமைகளுக்கு ஏற்ப, யாருடனும் பிணக்குகள் வாராது பழகுதல் ஓர் அற்புதக் கலை! சிறந்த கலை வழிபாடு!

இயல் - இலக்கியம்! சிறந்த இலக்கியங்கள் வடிவம் கொள்ளத் தக்கவாறு அறிவறிந்த ஆள்வினைகளை இயற்றி வாழ்தல் இயல்சார்ந்த வாழ்க்கை! பாட்டுடைப் பொருளுக்குக் கருவாய் அமையும்படி புகழ்பூத்த வாழ்வு வாழ்தல் எளிதன்று! அத்தகு இலக்கியமாய் அமைந்து இலக்கிய உருவாக்கத்திற்குக் கருவாய் அமையும் வாழ்க்கையை இயக்குதல் மிகச் சிறந்த கலைமகள் வழிபாடு!

“பாட்டும் பொருளும் பொருளாற்
பொருந்தும் பயனும் என்பாற்
கூட்டும் படிநின் கடைக்கண் நல்காய்”

என்று குமரகுருபரர் வேண்டுகிறார். தமிழிலக்கியம் முழுவதும் கவிதை இலக்கியங்களேயாம்! பாட்டுக்குப் பொருள், பதவுரையும் பொழிப்புரையும் மட்டுமல்ல. பாட்டின் பொருள். பாட்டுடைக் கருப்பொருளாகும்.

கு.XII.23.