பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனை மலர்கள்

349


நாடு ஏழை நாடல்ல. நிலம் முழுவதாகப் பயன்படுத்தப் பெறவில்லை. இயற்கை வளங்கள் முழுவதாகப் பயன்படுத்தப் பெறவில்லை. ஆதலால், இன்று செல்வ உற்பத்தியில் ஈடுபடுவதே திருமகள் வழிபாடு. நாட்டைத் தானியக் களஞ்சியமாக்கும். முயற்சியே திருமகள் வழிபாடு! நாட்டில் நூறுகோடி மரங்கள் நட்டு வளர்த்துப் பாதுகாத்தலே திருமகள் வழிபாடு! பணத்தைத் தேடிச் செல்லாதீர்! பசுமையைத் தேடிச் செல்லுங்கள். எங்கும் பசுமையைக் காணவேண்டும். மனிதனுக்கு ஆடைபோல, நிலத்திற்குப் பசுமைப்போர்வை தேவை! அப்போதுதான் நிலமகள், விளைவிக்கும் ஆற்றலை இழக்காமல் இருப்பாள்! நிலம் போற்றுவோம்! உழுது, உரமிட்டு, விதையிட்டு, நீர்பாய்ச்சி நிலமகளை - உழைப்பால் வழிபடுங்கள்! இதுவே இன்று நாடு அவாவி நிற்கும் திருமகள் வழிபாடு!

28-9–90
மலைமகள் வழிபாடு

ஆற்றலோ, ஆற்றல்! இன்று, எங்குப் பார்த்தாலும் எரிபொருள் சிக்கல் பற்றிய ஆய்வு பேச்சு ஆம் ! வையகத்தை இயக்குவது ஆற்றல்-சத்தி! இந்தத் தத்துவம் தலைமுறை தலைமுறையாக நமதுநாட்டில் வளர்ந்து வந்ததுதான்! ஆயினும், காலப்போக்கில் சக்தி வழிபாடு சடங்காகப் போய்விட்டது!

பொருள் - Matter - சிவம். ஆற்றல் - Energy - சக்தி என்று அறிவியல் சார்ந்த சமயம் கற்றுக் கொடுத்தது. இயங்காநிலை. சிவத்தொடு சத்தி ஒன்றியிருக்கும் நிலை! சிவத்தினுள் அடங்கி நிற்கும் சக்தி, ஆன்மாக்களின் படைத்தல், காத்தல், மறைத்தல், அருளல், அழித்தல் என்ற ஐந்தொழிலாற்றும் பொழுது சக்தி அம்மை! இந்த சக்தி, பெளராணிக உருப்பெற்ற பொழுது மலைமகள் ஆகிறாள்!