பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

378

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சிந்தனைப் புலன் வாய்ந்தவன். ஆனால், அவன் சிந்திக்க வேண்டுமே! சிந்தனை இயங்க மனிதன் தன் வாழ்நிலையுடன் மன நிறைவு கொள்ளாமல் மேலும் மேலும் வாழ்நிலையை--வளர்த்துக் கொள்ள விரும்பவேண்டும். வாழ்தலில்-நன்றாக வாழ்தலில்-இன்புறு நுகர்வு நலன்கள் அனைத்தும் பெற்று வாழ்தலில் விருப்பம் வேண்டும். தாம் பெற்றின்புறுவது போலவே மற்ற எல்லோரும் பெற்று இன்புற வாழ்தல் வேண்டும் என்ற எண்ணமும் முயற்சியும் உடையராய் இருத்தல் வேண்டும். இந்த உலகம் இப்படித்தான் இருக்கும் என்று சமாதானம் செய்து கொள்ளும் மனப்பான்மை கூடாது; இந்த உலகம் இப்படித் தான் இருக்கவேண்டும் என்று எண்ணி, இந்த உலகை மாற்ற ஓயாது முயற்சி செய்ய வேண்டும். எதற்கும் காரணம், சாமாதானம் சொல்லி மூளைச் சோம்பலுக்கு இரையாகக் கூடாது! நான் ஆர்? என் உள்ளம் ஆர்? ஞானங்கள் ஆர்? என்ற ஆய்வு தேவை; தொடர் ஆய்வு தேவை. இந்தக் களத்தில்தான் சிந்தனை பிறக்கும்.

கற்றல், கேட்டல், அறிவு

வாழ்க்கையின் நோக்கமே தேடல்! ஆம்! அறிவினைத் தேடல்! அறிவுக்கு வாயில்களாகிய கற்றல், கேட்டல், ஆய்வு செய்தல், சோதனை செய்தல் முதலியவற்றால் அறிவு கிடைக்கும். கற்றல், ஆன்மாவினிடத்தில் அறிவொளியைக் கனலச்செய்யும் முதல் முயற்சி! மனிதன் சிந்திக்கத் தொடங்கி வாழ்க்கையை நடத்த முயன்ற காலத்தினில் எண்ணற்ற சிந்தனையாளர்கள், வாழ்க்கையைப் பற்றியும், வாழ்க்கையைப் பயனுடையதாக்கும் வழி வகைகள் பற்றியும் எழுதியுள்ளார்கள். அவர்களுடைய அனுபவங்கள் நமக்கு அறிவாக அமைகின்றன. “திப்ஸ்” நகரில் ஒரு நூலகத்தின் வாயிலில் எழுதியுள்ள வாசகம் “ஆன்மாவுக்கு மருந்து” என்பதாகும். திருவள்ளுவரும்,