பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

29


படுத்துதல், நீர் நிலைகளைத் துாய்மையாகப் பேணுதல், காடுகள் வளர்த்தல், அவ்வப்பொழுது மக்கள் மன்றத்தில் தோன்றும் சிறிய பெரிய பூசல்களைத் தீர்த்து வைத்தல் முதலியவைகளை ஊராட்சி மன்றங்கள் திறமையாகச் செய்து வந்துள்ளன. திருக்கோயிலைச் சுற்றி வளர்ந்து வந்துள்ள ஆட்சி முறையில், நிறைவான மக்களாட்சித் தேர்வு முறை இடம் பெற்றிருந்தது. “குடவோலை"யின் மூலம் மக்கள் தங்கள் ஊராட்சி உறுப்பினர்களைத் தேர்வு செய்தனர். அரசு, யாரையும் ஊராட்சியில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நியமித்ததில்லை. பழங்காலத் திருக்கோயில்கள் சுதந்தரமான ஆட்சி உரிமைகள் பெற்ற மக்கட் பணிமனைகளாக இருந்தன என்பது நினைவுகூர வேண்டிய செய்தி.

அற்றார்க்கு உதவும் நிறுவனம்

திருக்கோயில்கள் அற்றார்க்கும் அலந்தார்க்கும் உதவும் நிறுவனங்களாக இருந்தன. குறிப்பாக வறியோர்க்கு உதவும் அமைப்புகளாக விளங்கின. தருமி என்றொரு ஆதிசைவன் திருமணம் செய்து கொள்ள வாய்ப்பின்றி வறுமைக்கு ஆட்பட்டிருந்தான். மதுரைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருந்த ஆலவாயண்ணல், கவிஞனாகிச் சங்கப் புலவனாகி நக்கீர்னோடு வாதாடி, பாண்டியனிடம் பொற்கிழி பெற்றுத் தருமிக்குத் தந்து உதவினான். திருஞானசம்பந்தர், அப்பரடிகள், சுந்தரர் ஆகியோரும் கூடப் பல சமயங்களில் பசித் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். அப்பொழுதெல்லாம் ஆங்காங்கு திருக்கோயில்களிலிருந்த இறைவன் அவர்களுக்குச் சோறும், தண்ணீரும் தந்து உதவியிருக்கிறான். திருஞானசம்பந்தர் பொன் வேண்டிக் கேட்டபொழுது, திருவாவடுதுறைத் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவனும் பொன் கொடுத்து உதவியதை அறிக. இங்ஙனம் இறைவன் மட்டுமின்றித் திருக்கோயிலைச் சார்ந்திருந்த ஊர்ச் சபைகளும் உதவிகளைச் செய்துள்ளன.