பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைச் செல்வம்

437


நடந்த போர்கள்தாம். இந்த வரலாற்று உண்மையை யார் தான் மறுக்கமுடியும்? ஆனால், அவை சமயச் சண்டைகளா என்பதை அன்புகூர்ந்து உள்ளவாறு ஆராய வேண்டும். சமயம் அனுபவத்தின் வழிபட்டது; அரவணைக்கத் தக்கது. அஃது அன்பின் கடல், அஃது எங்ஙனம் போரைத் துாண்ட முடியும்? சமயம் தத்துவமாக, வாழ்வியலாக இல்லாமல் நிறுவனங்களாக மாறி, புரோகிதர்களிடமும், சமயத் தலைவர்களிடமும் சிக்கிய பிறகு, யாருக்கு ஆதிக்கம் என்ற அடிப்படையில்தான் போர்கள் நிகழ்ந்தன. தெளிவாகச் சொன்னால் ஆதிக்க வெறியர்கள், மக்களிடத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த சமயத்தை, பசுத்தோல் போர்த்திய புலியென ஆதிக்க வெறியாட்டம் ஆடினர்.

ஒருவரின் சமய நெறி அனுபவத்தில் இன்னொரு அனுபவமுடையவர் வலிந்து ஆதிக்கத்தைப் பயன்படுத்தித் தன் சமயத்தைத் திணிப்பது நியாயமுன்று; நீதியுமன்று. இயல்பில் மனிதர்களுக்கு அமைந்த-வாய்ந்த சமய அனுபவ உரிமைகளைப் பாதுகாக்க அப்பரடிகள் அரசையே எதிர்த்துப் போராடினார். சமயச் சண்டைகள் என்று கூறப்படுபவை சமயச் சண்டைகள் அல்ல. சமயத்தின் பெயரால் நடந்த ஆதிக்கச் சண்டைகளே! எந்தவொரு தத்துவமும் ஆதிக்கத்தை மையப்படுத்திய நிறுவனமாக மாறி விட்டால் இத்தகைய விபத்துக்கு ஆளாவதைத் தவிர வேறு வழியில்லை. ஆதலால்தான் சமயங்களில் மிகப் பிற்காலத்தில் தோன்றிய இசுலாமிய சமயம் மதத்தலைவர்களை, புரோகிதர்களை மேலதிகாரமுடையவர்களாக ஏற்றுக் கொள்ளாமல் இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க.

மனித மன வளர்ச்சிக்குச் சமயங்கள் உதவியுள்ளன. சமயத்தின் பெயரால் சில நிறுவனங்கள், சில நாடுகள், சில இனங்கள் தவறுகள் இழைத்திருக்கக் கூடும். வரலாற்று நிகழ்வுகளில் உண்மையை ஓர்ந்து தெளியும் மனப்பாங்கு இல்லாது போனால் காலப்போக்கில் உண்மையே இராது.

சமயநெறி சாதி, இன வேறுபாடுகளைக் கடந்தது. ஆற்று வெள்ளம் வையகத்தை வாழ்கிக்கும், பயன்படுத்து