பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

456

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



திருக்கோயில் வழிபாடு முடிந்தவுடன் மூன்றாவது சுற்றில் உள்ள மண்டபத்தில் சமூகத்தினருடன் உட்கார்ந்து கலந்து பேச வேண்டும். இங்ஙனம் கலந்து பேசுவதால் மனக் கவலைகள் பறக்கின்றன; உறவுகள் வளர்கின்றன. சும்மாவா உட்கார்ந்து பேசுகின்றோம்? திருக்கோயில் பிரசாதங்களைச் சாப்பிட்டுக் கொண்டே பேசுகின்றோம். உறவுகலந்து உண்ணும் இனிய வாய்ப்புக் கிடைக்கிறது. திருக்கோயில் பிரசாதங்கள் நல்லசத்துள்ளவை; புரதச்சத்துள்ளவை. இதனால் உடல் உரம் பெறுகிறது.

இவ்வளவுக்கும் பிறகும் ஆன்மா பக்குவப்படக் களிப்பும் மகிழ்ச்சியும் தேவை. களிப்பும் மகிழ்ச்சியும் கிடைக்கும்படி பண்டையத் திருக்கோயில் கலைகள் உள்ளன. சிற்பம், ஓவியம், இசை முதலியவை உள்ளன. நல்ல இசை கேட்பதால் ஆன்மாக்கள் நைந்துருகிப் பக்குவப்பட முடிகிறது.

நம்முடைய திருக்கோயில்கள் சமுதாய நலன்களை மையமாகக் கொண்டே தோன்றின; வளர்ந்தன. சுற்றுப்புறச் சூழல் அடிப்படையிலேயே திருக்கோயில் அமைந்துள்ளது. திருக்கோயில் தோறும் திருக்குளம் வெட்டப்பட வேண்டும். நீரின்றி அமையாது உலகு! அடுத்துத் திருக்கோயில், மரங்கள் அடர்ந்த சூழலில் அமைந்த நிலை பழைய ஏற்பாடு. அரசவனம், கடம்பவனம் முதலிய வழக்குகளை நோக்குக! தலங்கள் தோறும் மரங்கள் வைத்து வளர்க்கப் பெறுதல் வேண்டும். மரங்கள் வளர்வதால் சுற்றுப்புறச் சூழ்நிலை பாதுகாக்கப்படுகிறது.

திருக்கோயில் வழிபாடு, அறிவியலில் தோன்றியது. திருக்கோயில் வழிபாடு அறிவால் வளர்ந்தது. திருக்கோயில்கள் அறிவியல் துறைகள் பலவற்றையும் வளர்த்து வந்துள்ளன; வளர்த்துக் கொண்டிருக்கின்றன. திருக்கோயில் வழிபாடு அறிவியல் சார்ந்த தொழில் நுட்பத்திற்கு எடுத்துக் காட்டு! வாழ்க, திருக்கோயில்கள்! வளர்க, திருக்கோயில் வழிபாடு!