பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அவாவை நீத்தல் எப்படி?

483


பிறர் நலம் நாடும் பாங்கு ஆசைக்கு இல்லை. எவருடைய நலனையும் பலியிட்டு ஆசை அடைய முயலும்.

ஆசை - பேராசை இவ்விரண்டக்கும் இடையே அப்படியொன்றும் பெரிய வேறுபாடு இல்லை. ஆசையே எரியும் தீ நாக்குப் போன்றதுதான். உலக வழக்கில் மனம் நிறைவு பெறாத ஆசையைப் பேராசை என்று கூறுகின்றோம். ஆசையின் இயல்பு. ஆசைப்பட்டதை எப்படியும் அடைய வேண்டும் என்பதேயாம். ஆசை நன்மை - தீமை, நீதி - அநீதி, நியாயம் - அநியாயம், இன்பம் - துன்பம் ஆகிய எவற்றைப் பற்றியும் நோக்காது. ஆசைப்பட்டதை அடைந்தே தீர்வது என்று வாழ்வதே ஆசையில் இயல்பு.

ஆசைப்படாமல் வாழ முடியமா? முடியாது. ஆனால், விரும்பி ஏற்கத்தக்க ஆசை எது? விரும்பி ஏற்க இயலாத - வெறுக்கத்தக்கது எது? வாழ்க்கையை இயக்குவது ஆசையே! ஆயினும் தேவையை விரும்பி அடைய முயற்சி செய்தல் நியாயமான ஆசை! அதேபோழ்து தேவைகள் கட்டுப் படுத்தப்பட்டிருக்க வேண்டும். பிறருக்குப் பயன்படுவனவற்றை அவர்ளுக்குப் பயன்படாமல் தன்னிடம் முடக்கும் ஆசை தவறு! தவறு!

ஆசை, அலைகடலின் அலைகளைப் போல வளரும். எண்ணெய் வசப்பட எரி நெருப்புப் போலப் பற்றி எரியும். “ஆரா இயற்கை” என்றது திருக்குறள். நலத்துடன் வாழ்வதற்குரியன தவிர விரும்பாமை வேண்டும். வாழ்வின் தேவைகள் கூட வேண்டாமையே! வாழ்தல் வேறு; சுகம் வேறு.

எந்த ஒன்றின்மீது ஆசை வருகிறதோ, அந்தப் பொருளின்றி, வாழமுடியாதா என்று எண்ணினால் ஆசைப்படுபவை வேண்டாம் என்றே அடிமனம் கூறும். எவ்வளவுக் கெவ்வளவு பொருள்களிலிருந்து விலகுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு துன்பம் குறையும்.