பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

51



கோயில் வளர்த்த
வாழ்வியற் கலைகள்[1]

தமிழ்நாடு வரலாற்றுப் புகழ்மிக்க நாடு. மனிதகுல வரலாறு தொடங்குவதற்கு முன்பே தமிழ் மக்கள், மொழி, கலை, இலக்கியம், சமயம் முதலிய பல்வேறு துறைகளில் வளர்ந்து புகழ் பெற்றிருந்தனர். இவ்வகையில் தமிழ் மக்களின் பழமைக்கும் வளர்ச்சிக்கும் சான்றாக இருப்பவை பல. அவற்றுள், தமிழ்மொழி வாழ்க்கைக்கு இலக்கணம் கண்டிருப்பதும், தமிழ் மக்களின் வழிபடு தெய்வம் ஆடல் வல்லோனாக அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கவையாகும். தமிழ் கூத்து, இசை, இயல் என மூன்று திறத்ததாக வளர்ந்து முழுமை பெற்றுள்ளது. அதுபோலவே தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் திருக்கோயில்கள் முக்கியமான பாத்திரத்தை வகிக்கின்றன. இமயம் முதல் குமரிவரை நமது இந்திய நாட்டு மக்களிடத்தில் திருக்கோயிலைச் சார்ந்து வாழும் நெறி கால் கொண்டு உள்ளது; சிறந்து பரந்துள்ளது.

“திருக்கோயில் இல்லாத திருவி லூரும்
திருவெண்ணீ றணியாத திருவி லூரும்
பருக்கோடிப் பத்திமையாற் பாடா வூரும்
பாங்கினொடு பலதளிகள் இல்லா வூரும்
விருப்போடு வெண்சங்கம் ஊதா வூரும்
விதானமும் வெண்கொடியும் இல்லா வூரும்
அருப்போடு மலர்பறித்திட் டுண்ணா வூரும்
அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே.”

என்ற அப்பரடிகளின் திருப்பாடலும்,

“கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்,”


  1. *திருச்சி, அகில இந்திய வானொலியில் 10-3-85இல் ஒலிபரப்பானது.