பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

61


நாட்டில் திருக்கோயில்களில் எல்லாம் திருமுறை விண்ணப்பிக்கும் பண்ணிசையாளர் நியமிக்கப் பெறுதல் வேண்டும். “அர்ச்சனை பாட்டேயாகும்” என்ற “உண்மை வழிபாட்டு நெறி” உயிர்ப்புப் பெற்றாக வேண்டும்.

இசை, தமிழோடு பிறந்தது. தமிழ், இசையோடு பிறந்தது. தமிழ் மக்கள் வாழ்வில் இசைக்கலை ஒன்றியிருந்தது. பிறந்த நாள்தொட்டு இறக்கும் நாள்வரையில், தமிழர்கள் வாழ்க்கையின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இசை இடம் பெற்றிருந்தது. தமிழிசை நெஞ்சத்தை ஈர்க்கும் ஆற்றலுடையது; இதயத்தைக் குழைக்கும் தன்மையுடையது. கற்றும் கேட்டும் மனம் அடங்காமல் அல்லற்படுவோர் பலர். பேய் மனம் எளிதில் அடங்காது; ஒடுங்காது; திருந்தாது. எண்ணில்லாத காலமாக, அலைந்து திரிந்த “ஊர் நாய்” போல் மனம் பழக்கவாசனையில் அகப்பட்டிருப்பது. ஆனால் அந்த மனத்தைத் தமிழிசை கேட்டுப் பழக்கப் படுத்தினால் எளிதில் கட்டுப்படும். நமது நாட்டு வழி, இசை இனபத்தில் இலயித்து நிற்றலே உய்வுக்கு வழி, உய்திக்கு வழி. இது மட்டுமா? தமிழோடு இசை வளர்ந்தது. திருக்கோயில்களில் தமிழிசை வளர்ந்தது. திருக்கோயில் தமிழிசையை வளர்த்தது. தமிழிசை இறைவன் புகழைப் போற்றி வளர்ந்தது; தமிழ் மக்களின் வாழ்நிலையை உயர்த்தியது. திருக்கோயிலிலேயே தமிழ்ச் சங்கத்தில் இசைபயிலும் இடம் தனியே இருந்தது. இந்த இடத்திற்குப் பெயர் “ஏழிசைச் சூழல்” என்பதாகும.

“சிறைவான் புனல்தில்லைச் சிற்றம்
பலத்தும்,எம் சிந்தை யுள்ளும்
உறைவான் உயர்மதிற் கூடலின்
ஆய்ந்தஒண் தீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனையோ? அன்றி
ஏழிசைச் சூழல்புக்கோ?