பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

79


கோல், சமூகம் வலிமையும் வனப்பும் பொருந்தியதாக இருப்பதை உலககோர் முன் எடுத்துக்காட்ட இஃது ஒரு நிகழ்ச்சி. மானிட சாதி ஒருமைப்பாட்டுடனும் வலிமையுடனும் இருப்பின் வையகத்தில் எதையும் நிகழ்த்தலாம். இயலாதது ஏது? இத்திருத்தேர் விழாவும் வாழ்வியற் கலையைச் சார்ந்தது என்று எடுத்துக் கூறவும் வேண்டுமோ?

இங்ஙனம் நம்முடைய வாழ்க்கை முழுவதுக்கும் மையமாக விளங்கும் திருக்கோயில் நமது செல்வமல்லவா? இத்திருக்கோயில்களைச் சற்றும் சிதைவுபடாமல் நாம் பேணல் வேண்டும். மிகப்பெரிய திருக்கோயில்களை எடுத்த மன்னர்கள் கூட எடுத்த பெருமையை விடப் பேணும் பெருமையே சிறந்தது என்று கருதியிருக்கிறார்கள்; தென்காசித் திருக்கோயிலை எடுத்த பாண்டிய மன்னன், திருக்கோயிலை எடுப்பித்து முடித்த பிறகு வெட்டி வைத்த கல்வெட்டில் பின்வருமாறு பொறித்து வைத்துள்ளான்.

“ஆராயிரம் இந்தத் தென்காசி
மேவும் பொன் ஆலயத்து
வாராத தோகுற்றம் வந்தால்
அப்போதங்கு வந்து, அதனை
நேராக வேயொழித் துப்புரப்
பார்களை நீதியுடன்
பாரா ரறியப் பணிந்தேன்
பராக்கிரம பாண்டியனே!”

என்பது அக்கல்வெட்டுப் பாடலாகும்.

ஆதலால் நாமனைவரும் நம்முடைய திருக்கோயில்களைக் கண்ணெனப் பேணுவோமாக! இத்திருக்கோயிலுக்குப் பகை, திருக்கோயில் மதில் கோபுரங்களில் செடி கொடிகள் முளைத்தலாகும். இவற்றை உழவாரம் கொண்டு அவ்வப்போது அகற்றுவோமாக! சிற்பங்களையும் ஓவியங்களையும் பாதுகாப்போமாக! திருக்கோயில் தூய்மை, நமது