பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

129


பிரதிபலிக்கும், ஆதலால் எந்த ஒரு குறைவுக்கும் அல்லது நிறைவுக்கும் தனி மனிதன் பொறுப்பல்ல. அவன் வாழும் காலத்துச் சமுதாயமே பொறுப்பு.

சமுதாயம் முழுமையாகத் திருந்தாமல் தனி மனிதர்களுக்கு நீதி உபதேசம் செய்வது கசாப்புக் கடைக்காரன் புலால் உண்ணாமைப் பிரச்சாரம் செய்வது போலத்தான். ஆதலால், சமுதாயம் முழுமைக்கும் பயன்தரத்தக்க சீர்திருத்தங்களை முதலில் செய்யவேண்டும். நிறை நலமுடைய சமுதாயமே ஒரு நல்ல தனி மனிதனை உருவாக்க முடியும்.

சமுதாயமே தனி மனிதனின் அறிவுக்கு ஊற்று செயல் திறனுக்குக் களம்; உணர்வுக்கு மையம், ஒழுக்கத்திற்குக் களைகண். சோஷலிச சமுதாய அமைப்பில் சமுதாயமே முதன்மைப் படுத்தப்படுகிறது. திருவள்ளுவரும் இனத்திலிருந்தே அறிவு கிடைக்கிறதென்றும்; உலகத்தோடு ஒட்ட ஒழுகுதலே ஒழுக்கம் என்றும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே கூறிய திருக்குறள் பாடல்கள் நினைவுக்குரியன.

மனிதனின் மனம் அறிவுக்குக் களமாய் அமைவது. ஆனால் அதுவே அறிவன்று. அறிவை ஏற்றுத் தொழிற்படுத்தும் ஆற்றல் மனத்திற்கு உண்டு. ஆனால், வளர்ச்சியடையாத உடற் குறைபோல மனக்குறையுடையோர் உணர்ச்சிவசப்படுவர். ஆனால் அறிவுநலம் இருக்காது. அதனால்தான் அறிவோடு சாரா உணர்ச்சி விலங்குணர்ச்சி யென்று இழித்துப் பேசப்படுகிறது.

மனத்தூய்மை இயற்கையில் அமைவதன்று. மனத் தூய்மையின்றி வினையில் தூய்மை காண்பது அரிது. வினைத் தூய்மையின்றி உயிர் தூய்மையுறுதல் அரிது. மனத்துய்மை வினைத்துாய்மை இவ்விரண்டும் சாரும் தூய்மையில் வந்து பொருந்தும்.

அதனாலன்றோ தெய்வப் புலவர் திருவள்ளுவர் சார்பறிந்து சார்ந்து ஒழுகச் சொன்னார். மனிதனின் சார்பு