பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

131


கின்றன. ஆனால் உண்மையில் மொழி காரணம் அல்ல; சமயம் காரணம் அல்ல. எல்லாவற்றிற்கும் மேலாக உள்ள ஒரு பொதுவான வாழ்வியல் அறத்தினை, ஆதிபத்திய உடைமைச் சமுதாயம் அழித்துவிட்டது. அதுதான் மனித நேயம்!

மனித நேயத்தை வளர்க்கவே மொழிகள், மொழிகளின் பயன், மனித உறவுதான். சமய நெறிகளின் பயன் மனித உறவுகளும் மேம்பாடுமேயாம். ஆனால் கருவிகள் முதன்மை பெற்று, கருவிகளின் பயன் புறக்கணிக்கப்படுகிறது. மொழிக் களன் பகைப்புலனாக்கப் பெற்றுள்ளது. சமய நெறியும் பகைப்புலனாக்கப் பெற்றுள்ளது. எங்கும் எதிர்மறையான அணுகுமுறை.

கல்வி, அறிவு வாயிலாக இல்லை. தேர்வுச் சான்றிதழாகவும், வேலை வாய்ப்பைப் பெறக்கூடிய நுழைவுச் சீட்டாகவும் மாறிவிட்டது. அறிவு, செயல் திறனாக இல்லாமல் விவாதத் திறனாக ஆகிவிட்டது. உழைப்பு, விரிவுவளர்ச்சி-வாழ்வித்தல் நோக்கின்றி பிழைப்புச் சாதனமாகி விட்டது. உறவு, தன்னலமறுப்பு-பிறர்நலம் நாடல் நெறியிலிருந்து முறை பிறழ்ந்து தற்சார்பினதாகவே மாறிவிட்டது. அரசுகள் ஆளப்படுபவருக்கு உத்தரவாதம் கொடுக்காமல் ஆள்கிற தங்களுக்கு உத்தரவாதம் தேடிக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டன. எங்கும் சிறைப்பட்ட அறிவு; உணர்வு. அதனால் மனித மதிப்பீட்டு அடிப்படையில் அமைய வேண்டிய சமுதாயம், பண மதிப்பீட்டுச் சமுதாயமாக மாறி விட்டது. இதுமுறை பிறழ்ந்த வளர்ச்சி. இந்த வளர்ச்சியின் எதிர் விளைவுகளே இன்றைய சமுதாயச் சிக்கல்கள். இன்று இந்த எதிர்விளைவுகள் பூதாகாரமாக வளர்ந்து தீமைகளைச் செய்கின்றன. மனித உறவுகள் அடியோடு கெட்டுவிட்டன. பகை வளர்ந்து ஒருவரை ஒருவர் அடுதலும் தொலைதலும் என்ற நிலைக்கு வந்துவிட்டனர். மனிதர்கள்; நோய்க்குரிய