பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

175


பெரிதும் ஆக்கத்திற்குத் துணை செய்யும். உழைக்கும் ஆற்றல் சமூகத்தின் உரிமைக்குரிய பொதுச் சொத்து. உழைப்பாற்றல் தனிமனிதனிடத்தில் இருந்தாலும் அந்த உழைப்பாற்றல் வழிவழிவந்த சமூக வரலாற்று அடிப்படையிலும் அமைவிலும் வந்தமைந்ததேயாகும். ஆதலால், உழைப்பு சமூகத்திற்குரியது. அந்த உழைப்பு சமூகத்திற்கு நலம் பயக்கும் உழைப்பாக அமையவேண்டும். உழைப்பும் சுரண்டலும் எதிர் எதிர்ப்பகை உழைப்பாளி சுரண்டி வாழ்தலை விரும்பான். சுரண்டிப் பிழைக்க நினைப்பவன் உழைப்பை விரும்ப மாட்டான். தொழிலாளியும் வரலாற்றுப் போக்கில் வளர்ந்து வந்துள்ள முதலாளிகளின் சுரண்டல் மனப்பான்மையை எதிர்த்துப் போராட வேண்டுமேயன்றி. அதை எதிர்க்கும் போக்கில் தொழிலாளியும் சுரண்டும் மனிதனாக மாறி விடுதல் கூடாது. உழைப்பாளிகள் வேலை செய்வதைத் தவிர்த்தல், ஆற்றலுக்கு ஏற்றவாறு உழைத்து உற்பத்தி செய்யா திருத்தல், தேவையில்லாமல் விடுப்பு எடுக்கும் நோய்க்கு இரையாதல் முதலியன கூடாது. உழைப்பு வான்மழையை நிகர்த்தது; இறைத்தன்மையது. உழைப்பே உலகத்தின் அமுதசுரபி!

பொருளே, மனிதகுல வரலாற்றுக்கு உந்து சக்தி! பொருளே, மனிதகுலத்தை இயக்குகிறது. பொருள் என்பது என்ன? மனிதர்கள் உயிருடன் கூடிவாழத் துணையான உண்டி, உடை, உறையுள் ஆகியன பொருளாகக் கருதப் பெறும். இவற்றுள்ளும் உயிர் வாழ்தலுக்கு இன்றியமையாதனவாகிய உணவுப் பொருள்கள், பொருள் என்று போற்றத்தக்கன. உண்ணும் பொருள்களுக்கு ஏற்றவாறு உடல்நலம், ஆன்ம நலம், அறிவுநலம் அமைகின்றன. உணவிலும்கூட அறிவியல் பாங்கு இருப்பின் நெடுங்காலம் வாழலாம். புரதப் பொருள், நோயற்ற வாழ்வுக்கு இன்றியமையாதது. சர்க்கரை, கொழுப்புப் பொருள்கள் குறைந்த அளவு தேவை. இத்தகு உணவைத் தேடி உண்ணத்துணை செய்வது பொருளீட்டும்