பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

177


வாழ்க்கையின் அமைவுகளுக்கு ஏற்பத்தான் உலகியல் நிகழ்வுகள் அமையும். இந்த நிகழ்வுகளே வரலாற்றின் உறுப்புகள்! ஆன்மாவிடம் உள்ள அழுக்காறு, அவா, வெகுளி, மடி, தற்சார்பு, தன்முனைப்பு, மந்தம், துக்கம் ஆகிய வேண்டாத குப்பை கூளங்களை நாள்தோறும் அள்ளி வெளியில் கொட்டவேண்டும்; ஆன்மா, நாள்தோறும் புதிய வாழ்வு வாழவேண்டும்; நாள்தோறும் தன்னை நினைந்து உயர்த்தி வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆன்மாவின் தரம் உயர்தலே வாழ்க்கையின் எல்லை; நலம்! ஆன்மாவின் தரம் உயர, உயர் குறிக்கோள் ஒன்றினை ஆன்மா இலக்காகக் கொள்ளவேண்டும். அக் குறிக்கோளை அடைய நாள்தோறும் ஆர்வத்துடிப்புடன் எடுக்கும் முயற்சியே வாழ்வு. ஆன்மா, சமூகத்தின் பாதிப்புகளுக்கு ஆளாவது; சமூகத்திற்குப் பாதிப்புகளைத் தரவல்லது. ஆதலால், ஆன்மாவின் அறிவியல் சார்ந்த நலனும், ஆன்மாவின் சமூகம் தழுவிய பண்பும், ஆன்மாவின் சமூக வாழ்வும் தான் சமூகத்திற்கு உடைமை; உந்து சக்தி! இந்த ஆன்மா, தன் தரத்தை உயர்த்திக் கொள்ள நாளும் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய கடமை செய்யவேண்டும். ஆன்மாவின் அறிவுக்கும் ஆற்றலுக்கும் எல்லையில்லை! சுருங்கிய எல்லையிலிருந்து விரிந்த எல்லைக்கு ஆன்மா பயணம் செய்கிறது. இதற்குத் துணையாக, இயல்பிலேயே எல்லை கடந்த கடவுள், துணை செய்யக்கூடும்; துணை செய்யும்! கடவுள், துணையே! வழிபாடு - பிரார்த்தனை என்பது வாலறிவனின் - உயர்வற உயர்ந்துள்ள ஒரு பரம்பொருளின் - ஆற்றலை நினைந்து நினைந்து தனக்குத் துணையாகப் பெற்றுக் கொண்டு வளர்தலையே குறிக்கும். இத்தகு ஆன்மிக வாழ்க்கையும் கூட அறிவியல் சார்பானது தான்! மரங்கள், கதிரவனின் வெப்பத்தை ஈர்த்து ஒளிச்சேர்க்கைக்குப் பயன்படுத்தி, உணவு தயாரித்துக்கொண்டு செழித்து வளர்கின்றனவே, அது போன்றதுதான் பிரார்த்தனையுடன்