பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


யூறாக இருக்கின்றது என்றெல்லாம் கருதுகிறார்கள். இத் துறையில் பெரியார் அவர்களோடு நாம் முற்றிலும் முரண்பட்ட கருத்துக்களையே கொண்டிருக்கிறோம். அறிவிற்கும், அனுபவத்திற்கும் ஒத்துவராத, பிற இனவழிப் பட்ட சமயக் கொள்கைகள், பெரியார் அவர்களுடைய கருத்துக்கு இயைந்திருக்கக்கூடும்.

ஆனால், தமிழினத்தின் அறிவிலே, அனுபவத்திலே பூத்துக் காய்த்துக் கனிந்த சமயநெறி, அறிவிற்கும், அனுபவத்திற்கும் ஒத்து வரக்கூடியது; நம்பிக்கைக்கும், நல்வாழ்க்கைக்கும் ஏற்றது; முன்னைப் பழமைக்கும் பழமையினதாய், பின்னைப் புதுமைக்குப் பெயர்த்தும் அப்பெற்றியதாய் விளங்கும் பெருநெறி. தமிழினத்தின் சமயநெறி, சமரசநெறி, அன்புநெறி, அருள்நெறி ஆகும். பிற இனவழிப்பட்ட கொள்கைகளின் கூட்டால் பிற்காலத்தில் விளைந்த சமயத்தைச் சார்ந்த போலிக் கொள்கைகளையே தலைவர் பெரியார் அவர்கள் சாடுகிறார்களென்று நாம் கருதுகிறோம்.

தமிழினத்தின் தலைசிறந்த நாகரீக மேற்பாடுகள், சமயச் சார்பிலே விளைந்தனவேயாகும். இத்துறையில், காலப் போக்கில் ஒரு புதிய தெளிவான முடிவு உருவாகவேண்டும். சமயச் சார்பினர் நம்முடைய சமயச் சூழலை மக்கள் மனங் கொள்கின்ற அளவுக்கு ஏற்றவாறு, தகுதி படைத்த சமய வாழ்வினை மக்கள் முன்னிலையில் வைக்கவேண்டும்.

தம்மதத்தைச் சீர்திருத்தம் செய்யக்கூடப் பெரியார் உறவு தேவை என்று கருதுகின்றேன். நான் பயிர் வளர்ப்பவன். பயிரில் பல களைகளும் அடிக்கடி முளைத்துவிடுவது உண்டு. பெரியார் அவர்கள் பயிருக்கு இடையே முளைக்கக்கூடிய, களையினைப் பிடுங்கி எறியக்கூடியவர், களை பிடுங்கா விட்டால், பயிர் வளராது. எனவே சமயம் என்னும் பயிர் வளர, மூடத்தனம் என்னும் களையைப் பிடுங்குவதற்குப் பெரியார் அவர்களின் உறவு தேவைப்படுகின்றது.