பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் அனைத்திலும் தமிழையே பயிற்சி மொழியாகக் கொண்டு வருதல் வேண்டும். அதுவே தமிழர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்குப் பெரிதும் இன்றியமையாததாகும்.

தாய்மொழி மூலம் கலைகளைப் பயிற்றுவிப்பதில் வெற்றியும் பயனும் ஏற்படுமா என்று ஐயப்படத் தேவையில்லை. தமிழைவிட காலத்தாலும் கருத்தாலும் பிற்பட்ட உருசிய மொழி போன்றவைகள் அறிவியல் மொழியாக வரவில்லையா? அவர்கள் அறிவியல் துறையில் முன்னேறவில்லையா? காலங்கடந்த பழமையும், கருத்தளவில் பெரிதும் வளர்ச்சியும் பெற்ற தமிழ், அறிவியல் மொழியாக - பல்கலை மொழியாக வளர்வதற்குத் தடை என்ன இருக்க முடியும்? இந்திய தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஆங்கிலம் இன்றியமையாதது என்பது ஒரு சிலரின் கருத்து. பாரதத்தின் தலைமை அமைச்சர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் இந்திய ஒற்றுமையின் சின்னம் இந்தி என்று குறிப்பிட்டுள்ளார். நமக்கு இவ்விரண்டில் எதை ஏற்றுக் கொள்வது என்பது விளங்கவில்லை.

இந்திய தேசிய ஒருமைப்பாட்டின் அடித்தளம் மொழி வழியுரிமையும் சிந்தனையுமாகும். இந்தியாவின் ஒருமைப் பாட்டுக்கு ஏன் ஒரு மொழிக் கொள்கை வற்புறுத்தப் பெற வேண்டும். அங்கும், மும்மொழிக் கொள்கை காணலாகாதா? அல்லது பலமொழிக் கொள்கைதான் காணலாகாதா? ஆனால் நாம் - தமிழர்கள் இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளைப் பயிலக்கூடாதென்ற கொள்கையுடைய ஆங்கில எதிர்ப்பாளர்களோ, இந்தி எதிர்ப்பாளர்களோ அல்ல, இம்மொழிகளையும் தமிழர்கள் பயின்று பயன் பெறுதல் வேண்டும். ஒப்பு நோக்கும் அறிவிற்கும் உலகியல் வாழ்வுக்கும் பன்மொழிப் பயிற்சி கட்டாயமாகத் தேவை. ஆனாலும் பயிற்சி மொழி எந்தச் சூழலிலும் தாய் மொழியாகவே இருத்தல் வேண்டும். வாய்க்கால்களின் வழியாகத் தண்ணீர்