பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மொழி

269


இதிகாசங்கள் நம்முடைய அறிவை மழுங்கச் செய்தனவோ, உணர்வுகளை உருக்குலைக்கச் செய்தனவோ அந்த இதிகாசங்களே ஆர்ப்பரவத்துடன் பட்டி மண்டபங்களில் நடமாடுகின்றன. நாம் சங்க இலக்கியங்களைத் தமிழகத்தின் சந்து பொந்துகளில் நடமாடவிடவில்லை. அயல் வழக்கினை வென்று விளங்கிய செழுந் தமிழ் வழக்கினை நமக்குத் தந்த திருமுறைகள் தமிழகத்தின் தெருக்களில் முழங்கப் பெறவில்லை. அவை, தமிழகத் திருக்கோயில்களில் இரண்டாம் நிலைக்குத் தள்ளப் பெற்றுள்ளன. ஏன்? நமது நாட்டின் அரசியல் இயக்கத்தில்கூட மந்த நிலை தெரிகிறது. அதற்குக் காரணம் என்ன? நமது தமிழ் உயிர்ப்போடு இல்லை. எங்கும் கொச்சைத் தமிழ், கலப்புத் தமிழ். உயிர்த்துடிப்புள்ள பாரதியின் தமிழை, பாரதிதாசனின் தமிழைக் காண இயலவில்லை. களியாட்டத் தமிழாகி உண்டாட்டில் உறங்கும் நிலையே காரணம். வாக்குரிமையின் அருமையை 75 விழுக்காட்டுக்கு மேற்பட்ட மக்கள் இன்னமும் அறியார். தெளிவில்லாத தேர்தல்! தெளிவை வழங்காத தேர்தல்! ஆதலால் நாட்டு மக்களிடத்தில் அரசியல் தெளிவில்லை. அரசியல் இயக்கங்கள் வெற்றிகளையே குறிக்கோளாகக் கொண்டு இயங்குகின்றன. மக்களிடத்தில் அரசியல் தெளிவு காணாத வரை, அதற்குத் தமிழ், பயன்படாதவரை இந்நிலைதான் தொடரும். நம்முடைய தமிழ் அரசியல் மொழியாக, சமுதாய மொழியாக உயிர்ப்புள்ள இடத்தைப் பெறவில்லை. 'தமிழ் மொழி வாழ்க!' என்று முழங்கினால் போதாது. உயிர்ப்புள்ள அறிவியல், தொழிலியில், பொருளியல், அரசியல் நூல்கள் தமிழில் தோன்ற வேண்டும். மொழிபெயர்ப்புகள் தோன்றினால் போதா. நூல்கள் தமிழர்தம் சிந்தனையில் தோன்றி மலர வேண்டும். தமிழ்த் தாய் என்று புதுமை நலமும், நிறை நலமும் பெற்று ஒளிர்கிறாளோ அன்றே இந்தியின் ஆதிக்கம் அகலும். தமிழ்த் தாயை வளர்ப்பது நமது கடமை. தமிழ்த் தாய் வளர்ந்தால் தமிழர் வளர்வர்; தமிழகம் வளரும். பாரதம்