பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

324

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உயர்வும் இல்லை. தாழ்வுமில்லை. பிறப்பில் வளம் - வறுமை வேறுபாடுகள் இல்லை; அறிஞரும் இல்லை - முட்டாள்களும் இல்லை! நல்லவர்களும் இல்லை - கெட்டவர்களும் இல்லை. சாதிகள் இல்லை - கடவுளும் இல்லை; மதங்களும் இல்லை; மொழிகளும் இல்லை! இனமும் இல்லை! இதுதான் இயற்கையின் நியதி. மேற்கூறியவையெல்லாம் பிறந்து வளரும் பொழுது சார்புகள் காரணமாக வந்தமைகின்றன. கற்பிக்கப்படுகின்றன. இவற்றுள் சில திணிக்கப்படுகின்றன; ஒருசில, நலத்தின் அடிப்படையில் தவிர்க்க இயலாத நிலையில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

மனிதகுலம் இயற்கையோடு ஒத்திசைந்து வாழ்ந்து கொண்டிருந்த வரையில் எந்த வேற்றுமையும் தோன்றவில்லை. ஒருமை நிலையே இருந்தது; சமநிலையும் இருந்தது. உழுது வேளாண்மைத் தொழில் செய்யத் தொடங்கிய சூழ் நிலையில்தான் தனியுடைமைச் சமுதாயம் தோன்றியது. பண்ணையடிமைச் சமுதாய அமைப்பிலிருந்துதான் சாதி முறைகள் தோன்றின; வளம்-வறுமை வேறுபாடுகளும் இடம் பெற்றன. இத்தகு முறைபிறழ்வான சமுதாய அமைப்பைக் காக்கும் நோக்கில் கடவுள் மதங்கள் கருவிகளாகப் பயன்படுத்தப்பெற்றன. இங்ஙனம் தோன்றி வளர்ந்த சாதி, குல, இன, மத வேற்றுமைகள் மனித குலத்தை என்புருக்கி நோய் போல் தின்று உருக்குலைத்து அழித்து வருகின்றன.

இந்திய வரலாற்றிலும் சரி, தமிழக வரலாற்றிலும் சரி சாதிகளால் விளைந்த தீமைகள் பலப்பல; இந்நாளிலும் இந்தத் தீமைகள் தொடர்கதையாய் நடந்து கொண்டிருக்கின்றன. சாதி, குல, கோத்திரப் பிரிவினைகளிலிருந்து மக்களை மீட்டாலொழிய நமக்கு எதிர்காலமில்லை.

சாதிமுறைகள் பொருளாதார அடிப்படையிலேயே தோன்றி வளர்ந்தன. சாதிமுறைகளை "ஈன்று தந்தது" நிலப் பிரபுத்துவ சமுதாயம். இந்தச் சாதி முறைகளை செவிலித் தாயாக இருந்து வளர்த்துக் காப்பாற்றிக் கெட்டித் தன்மையுடையதாக ஆக்கியது புரோகித மதம்!