பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

331



9. [1]இந்தியாவில் சாதி, சமூகச் சிக்கல்களும் – தீர்வும்


அன்பர்களே! பெருமைக்குரிய பல்கலைக் கழகத் துணைவேந்தர் அவர்களே!

கடந்த நான்கு நாள்களாக நாட்டுப் பற்றாளர்களும் சமூகச் சிந்தனையாளர்களும் அண்ணல் காந்தியடிகள் சிந்தனை நிழலில் கூடி இந்தியாவைப் பற்றிப் பொதுவாகவும், பஞ்சாப், காஷ்மீர், மண்டைக்காடு, இராமஜன்மபூமி போன்ற பல பிரச்சனைகளைப் பற்றிச் சிறப்பாகவும் சார்பற்ற நிலையில் மனம் விட்டு விவாதித்தோம்; கலந்து பேசினோம். ஒரு முடிவு மனோநிலையில்தான் கலைகின்றோம் என்று நம்புகின்றோம்.

பொதுவாக ஒரு தீமை, பிறிதொரு தீமையைத் தோற்றுவிக்கிறது என்பது நியதிகளில் ஒன்று. அது போல இந்திய நாட்டின் கல்வித்துறை அறிவுத் தாக்கத்தையும் அறிவியல் தாக்கத்தையும் ஏற்படுத்தாதது ஒரு பெரிய குறை. அடுத்து, நமது சமூக வாழ்வியலும் கல்விமுறையும் உழைப்பை வாழ்க்கையாக ஏற்றுக் கொள்ளும்படி தூண்டி நெறிப்படுத்த வில்லை. நம்மில் பலருக்கு வாழ்க்கை பிழைப்புச் சாதனமாக இருக்கிறது. இது நெறிமுறை பிறழ்ந்த நிலை. அதோடு சமூக வாழ்வியல் அமைப்போ இன்னமும் உருவாகவில்லை. இந்தியாவில் – தமிழ்நாட்டில் மக்கள், கூட்டம் கூட்டமாக வாழ்கின்றனர். இன்னமும் சமூகமாக வாழவில்லை. அறிவு, ஆளுமை, பண்பாடு வாழ்க்கையின் தேடு பொருள்களாக இல்லாமல் பணமே தேடுபொருளாக இடம் பெற்று விட்டது.


  1. மதுரை காமராசர் பல்கலைக் கழகம் காந்தீய சிந்தனைத் துறை – இராமலிங்கர் சிந்தனைத் துறை 1990 மார்ச்சு 17, 18, 19, 20ஆம் நாள்களில் நடத்திய "இந்தியாவில் சாதி, சமூகச் சிக்கல்களும் – தீர்வும்" கருத்தரங்கின் தொகுப்புரை.