பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

342

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


விவசாயிகள் அதிக வருவாய் பெறுவர்; நில அளவிற்கு ஏற்றாற்போல மகசூல் பிரித்துத் தரப் பெற வேண்டும். விவசாயிகள் விவாசய வேலைகளில் பங்கேற்க வேண்டும்; அதற்குரிய ஊதியத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும். விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்ட கூட்டுறவு அமைப்பாக நிர்வாகம் செய்யப் பெறவேண்டும். உயர் அரசு அலுவலர் உதவியாலும் நடைபெறலாம். ஆனால் இது அவ்வளவு எளிதானதன்று. தனியுடைமை என்ற நஞ்சு, ஊனையும் உயிரையும் கெடுத்து, தந்தை - மகன் பாசத்தையும் கெடுத்துவிட்ட நிலை இன்று ஏற்பட்டுவிட்டது. ஆதலால், விவசாயம் செய்தலைத் தவிர, மற்றெல்லாப் பணிகளையும் நீர்ப்பாசனம், பயிர்ப் பாதுகாப்பு முதலியவற்றைக் கூட்டுறவினால் செய்ய முதல் நிலையில் முற்படலாம். அதோடு வேளாண்மைக் கருவிகள் முதலியன வாங்கி வாடகைக்குத் தரலாம்.

4. கிராமத்தில் நிலங்களை, வீட்டுத் தோட்டங்களைத் தரிசு போடுவதைத் தவிர்க்க முயற்சி செய்வதுடன், அவசியம் எனில் தரிசு போடுபவர்களுக்கு ஊராட்சி மன்றம் 'தரிசுத் தண்டனையாக' அபராதம் விதிக்கலாம் என்று வரையறை செய்வது நல்லது.

5. கிராமங்களில் பொதுவாக நெல் சாகுபடி செய்வதிலேயே பெரு விருப்பம் இருக்கிறது. இதனை அறிவார்ந்த முறையில் மாற்றிப் பலவகைப் பயிர்ச் சாகுபடிக்கு கொண்டு வர வேண்டும்.

6. கிராமத்தின் உணவுப் பொருள் தேவையைக் கணக்கிட்டு, நிலப் பரப்பையும் கணக்கிட்டுப்