பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஏற்றுக் கற்க முன்வருவதில் தடையிருக்காது. இதனால் ஆட்சி ஒருமையும்-மக்கள் ஒருமையும் வளரும்.

இன்றிருக்கிற பாராளுமன்றம் மக்கள் தொகை அடிப்படையில் அமைந்துள்ளது. நிறைவான மக்களாட்சி முறைக்கு இது சால்பானதேயாம். ஆயினும், மாநிலங்களின் சிக்கல்களை, மாநிலங்களிடையே உருவாகும் சிக்கல்களை ஆய்வு செய்து வழிகாட்ட தேசிய நலக்குழு அமைதல் வேண்டும். இத்தேசிய நலக்குழு, மாநிலங்கள் அடிப்படையில் அமைதல் வேண்டும். இது அரசியல் சட்டரீதியானதாகவும் அதிகார வரம்புகள் உடையதாகவும் அமையவேண்டும்.

இந்திய அரசின் அமைச்சரவையில் எல்லா மாநிலங்களுக்கும் சமநிலையில் வாய்ப்புகள் வழங்கவேண்டும். இந்திய நீதி, ஆட்சிமுறைகள் சார்புகளைக் கடந்ததாக-தேவைகளை மையமாகக் கொண்டதாகவே அமைய வேண்டும். இந்தியக் குடியரசு தினவிழா அனைத்து மாநிலங்களும் கூடிக் கொண்டாடத்தக்கதாக- சுழற்சி முறையில் எல்லா மாநிலத் தலைநகர்களிலும் கொண்டாடப் பெறுதல் வேண்டும். குடியரசுத் தலைவர் பொறுப்பேற்றவுடன் அவர் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று அந்தந்த மாநில சட்டமன்றங்களில் சட்டமன்ற உறுப்பினர்களையும் பொதுமேடைகளில் மக்களையும் சந்தித்துப் பேசவேண்டும். இந்தியக் குடியரசுத் தலைவரைக் கூட மாநில வாரியாக சுழற்சி முறையில் தேர்வு செய்யும் பொது நடைமுறையைச் செயற்படுத்துவது பற்றிக் கூட எண்ணிப்பார்க்கலாம். ஒரு மாநிலத்து இளைஞர்கள் அடுத்த மாநிலங்களில் உயர் கல்வி கற்க-ஆய்வு செய்ய விரும்பத்தக்க சூழ்நிலைகளை உருவாக்கவேண்டும். சிந்தனையும்-கல்வியுமே ஒருமைப்பாட்டுக்குத் துணை செய்யக் கூடியவை. இந்திய இலக்கிய விழாக்கள் நடத்தவேண்டும். இந்தியாவை ஒரு நாடாகக் கட்டிக் காப்பாற்றவேண்டும். அதற்கு ஏற்ற சிந்தனை-பழக்க வழக்கங்கள் உருவாதல் வேண்டும். இந்திய