பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

373


உள்ளனவற்றைக் கற்கும் கல்வியால் பெறும் அறிவைவிட இந்த உலகம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எண்ணி முடிவெடுக்கும் அறிவே அறிவு? மாற்றும் முயற்சியே அறிவறிந்த ஆள்வினை! அத்தகைய அறிவியல் மேதைகளாக நீங்கள் விளங்க வேண்டும்.

இந்த உலகத்தை வெறுக்காதீர்கள்! இந்த உலகத்தைப் பரிவுடன் நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்! உயிர்க் குலத்தினிடத்தில் அன்பைப் பொழியுங்கள்! யாரோடும் பகை வேண்டாம்! வன்முறை வேண்டாம்! இங்குள்ள மாந்தருக்குப் பணிசெய்ய விரும்புங்கள்! முயற்சிகளும் போராட்டங்களும்கூட நெடிய வாழ்க்கைப் பயணத்தில் துணையாக உடன் வரக்கூடியன. தக்க தோழர்களைத் தேர்ந்தெடுங்கள்! அத்தோழர்களிடம் அன்பு காட்டுங்கள்! இத்தகு வாழ்க்கையில் நீங்கள் அடியெடுத்து வைக்கும்பொழுது உங்கள் வாழ்க்கையின் குறிக்கோள் தடைபடும்; விலங்குகளை விட – மாக்களைவிட மக்கள் நிலை உயர்ந்ததாக விளங்குதல் நன்னெறிகளாலும் பண்பாடினாலுமேயாகும். நன்னெறிகளாவன: வாழ்க்கைப் பயணத்தின் தடங்கல் அல்லது வழி முறைகள். பண்பாடாவது, பாடறிந்து ஒழுகுதல், அதாவது (Behaviour Science) பழகும் பாங்கு கல்வி அறிவு சார்ந்து வாழும் வாழ்க்கையின் நோக்கம் புகழ்பெறுதல் அல்ல; பரிசுகள் பெறுவது அல்ல. நன்மை செய்ய வேண்டும். இங்கு வாழும் மக்களுக்கெல்லாம் நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணுவதும் செய்வதும் நன்னெறி விலங்குகளிடமிருந்து மானிடன் பிரித்தறியப்படுவதற்குத் துணையாக இருப்பது அறிவும் உணர்ச்சியும் மட்டுமல்ல; அவனுடைய செயல்களே! நன்னெறிப்பண் பாட்டில் முதிர்ந்த நிலையே கல்வியின் ஆக்கம் கை கூடிய நிலை.

இன்று நம்முடைய நாட்டை ஒருமுறை உற்று நோக்குங்கள்! உங்களுக்கு மனநிறைவு ஏற்படுகிறதா? நிச்சயம் ஏற்படாது. எங்கும் நெறிமுறை பிறழ்ந்த வாழ்வு உயர் மரபுகளை இழந்த சனநாயகச் செயல்முறைகள்! வறுமைக்

கு.xiii.25.