பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

378

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உடைய பிறப்பு. மனிதன் பெற்றுள்ள மூளை, அளவற்ற ஆற்றலுடையது. உடற் பருமனும் வலிமை மிகுதியும் உள்ள கொடிய நிலங்களைக்கூட அடக்கி ஆளக்கூடிய ஆற்றலுடைய மனிதன் தன்னை நெறிப்படுத்திக் கொள்ளத் தவறி வீழ்ந்து வீணே மடிந்து போகிறான். மானுடத்திற்கு வாய்த்துள்ள சிந்திக்கும் ஆற்றலும் அறிவு பெறும் வாயில்களும் அளவற்ற சாதனைகளைச் செய்யத் துணை செய்வன. ஆனால் இன்றோ, மனிதன் சிந்திக்கவே மறுக்கிறான். சிந்திக்கவே மறந்துவிட்டான். அறிவைத் தேடும் வேட்கையே இல்லை. "சீனாவில் இருந்தாலும் அறிவைத் தேடு" என்றார் எம்பெருமானார் நபிகள் நாயகம். இன்று அறியாமையை அறிவு என்று நம்பிக்கொண்டிருக்கின்றான். பழக்க வழக்கங்கள் என்ற ஊழ்வழித் தடத்திலேயே சுற்றிச் சுற்றிக் கொண்டிருக்கிறான். புதியன சிந்திப்பதில்லை. புதியன விரும்புவதில்லை. நல்ல நூல்களைக் கற்பதில்லை. கசடறக் கற்கக்கூடிய நூல்களைத் தேர்ந்தெடுத்துக் கற்பதில்லை. ஒரோ வழிக் கற்றாலும் அசைபோடுவதில்லை. பயன்படுத்துவதில்லை. கம்பனின் கவலை - 'மானுடம் வென்றதம்மா' என்ற கனவை நினைவாக்க முயல்கின்றான் இல்லை. ஐயோ! பாவம் அற்புதமான மானுடப் பிறவியைச் சுடுகாட்டில் எரிப்பதற்காகவே வளர்க்கின்றான் வளர்க்கப்படுகின்றான்!

மானுடம் வெற்றிபெறக் கல்வி தேவை. 'கற்க' என்றார் திருவள்ளுவர். 'கற்க' என்ற சொல் ஆணையிடும் தொனியில் அமைந்திருக்கிறது! ஆம் ! கற்க! நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்துக் கற்க! நாள்தோறும் கற்க! வாழ்நாள் முழுதும் கற்க! உன் உள்ளக் குற்றங்களை நீக்குதலுக்குரிய நூல்களைத் தேர்ந்தெடுத்துக் கற்க! நல்ல நூல்கள் ஆன்மாவுக்கு மருந்தனையவை. ஆம்! மானுடத்தின் வெற்றிக்குத் தடை உள்ளக் குற்றங்கள் தாம்!

ஆன்மாவின் குற்றங்களில் தலையாயது பயம். பயத்திலிருந்து மீள வேண்டும். பயத்தை அச்சம் என்றும்