பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

390

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பொழுது தீ பிறப்பதைக் கண்ட மனிதன், அதிலிருந்து எரிசக்திப் படைப்பில் படிப்படியாக வளர்ந்து இன்று சூரிய எரிசக்தியை அடுப்பங்கரையில் உபயோகப்படுத்தும் அளவுக்கு வளர்ந்துவிட்டான்! மனித வாழ்க்கையில் எரிசக்தி அறிவியல் ஏற்படுத்தியுள்ள பாதிப்புக்கள் – அனுகூலங்கள் பலப்பல. சுவையாகச் சமைத்து உண்கிறான்; சமைத்த பொருள்களைப் பாதுகாத்துக் கொள்கிறான். தட்ப வெப்பத்தைக் கட்டுப்படுத்தி நலமுடன் வாழ்கிறான்.

அடுத்து, மனித வாழ்க்கையில் காலமும் தூரமும் பிரச்சினையாக இருந்தன. தொடக்கத்தில் கால்களாலேயே காடுகளில் நடந்தான். கால்கள் வலித்தன. விலங்குகளை ஊர்தியாகப் பயன்படுத்தினான். பின், மெள்ள வண்டிக்கு வளர்ந்தான். அதன்பின் படிமுறையில் உந்து ஊர்திகள், விமானங்கள், கண்டம் விட்டுக் கண்டம் செல்லும் உயர் ஆற்றலுடைய விமானங்கள் வளர்ந்து வந்திருக்கின்றன. இதனால் மனிதனின் உழைப்புக்குரிய காலம் கூடியிருக்கிறது. உழைப்பாற்றல் கூடியிருக்கிறது. தனியே அல்லது சிறு குழுக்களாக வாழ்ந்த மனிதன், இல்லை மனித மந்தை இன்று உலகந்தழீஇய மாபெரும் சமுதாயமாக விசுவரூபம் எடுத்து வளர்ந்திருக்கிறது. இது அறிவியலால் ஏற்பட்ட பெரிய மாற்றம். ஆயினும், வசதிகளுக்குரிய அறிவியல் வளர்ந்தது போல, மனித உறவுகளை வளர்த்து, இணைக்கக்கூடிய சமூக விஞ்ஞானம் இன்னும் போதிய அளவு வளரவில்லை. அதனாலேயே சண்டைகள் நடக்கின்றன. சமூகஇயல் துறையிலும் மனிதன் வளர்ந்து விட்டால் இந்த உலகம் சொர்க்கம்தான்;

மனிதனின் கனவாக, புனைவாக இருந்த அண்டங்கள், கண்டங்கள், கோள்கள் இன்று கண்முன்னே தென்படும் உண்மைப் பொருள்களாகியிருக்கின்றன என்பது மனித வாழ்க்கைக்கு அறிவியல் தந்த ஒரு பெரிய வரம் மானுடம்