பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

416

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


காதலுக்குத் தடை காமம். நெஞ்சார்ந்த பக்திக்குத் தடை ஆசை நெஞ்சு கலந்த நட்புக்குத் தடை நம்பிக்கையின்மை; அறிவார்ந்த ஆள்வினைக்குத் தடை அச்சம்; தெளிந்த ஊற்றுக்குத் தடை பாசி, அதுபோல மனித குலம் செழித்து வளரத் தடை ஒன்றல்ல; பலப்பல. வேளாண்மையில் களை யெடுத்தலும் ஒரு தொழில், நம்முடைய மனித சமுதாயம் செழித்து வளர வேண்டும். அறிவில் செழிக்க வேண்டும். ஆள்வினையில் செழிக்க வேண்டும்! வாய்மையில் செழிக்க வேண்டும். இன்பத்தில் செழித்துக் குலுங்க வேண்டும்; ஆம், வாழ்க்கை வாழ்வதற்கே! இன்பத்தோடு வாழ்வதற்கே!

வாழ்க்கையின் இயற்கை இன்பமே! ஆனால் இன்பம் அருகிக் கிடக்கிறது; துன்பமே சூழ்ந்து கிடக்கிறது. துன்பத்தைக் கண்டு வாழ்க்கையே தீயதென்று புலம்பி அழுபவர்களும் உண்டு. ஆனால் அது வாழும் முறையன்று. திருநாவுக்கரசர் "வாய்த்தது-நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடு மின்” என்று ஆணையிட்டுள்ளார். உலகம் இன்னாததாக இருக்கலாம். ஆனால் இன்னாத உலகத்தை இனியதாக்குதல் மனிதனின் கடமையென்று புறநானூறு பேசுகிறது. "இன்னா தம்ம இவ்வுலகம் இனிய காண்க" என்பது புறநானூற்றின் ஆணை. துன்பம் மனிதனை அழிக்கும் தரத்தன்று. மனித ஆற்றல் வளரவே துன்பம் துணை செய்யும். இயற்கையில் நிலத்தில், செந்நெல்லும் விளைவிக்கலாம். செங்கரும்பும் பயிர் செய்யலாம். செந்நெல்லும், செங்கரும்பும் பயிர் செய்ய முயற்சி தேவை. ஆனால் பயன்படாத கள்ளி முளைக்க முயற்சி தேவையில்லை. பயன் தரும் மரம் வளர்க்க முயற்சி தேவை. ஆனால் புல்லுருவியோ தானே வளர்கிறது.

வாழ்க்கை செழித்து வளரத் தடையாயுள்ள கேடுகள் களையப்பெறுதல் வேண்டும். அறியாமை ஒரு சாபக்கேடு. விலங்குகள் கால்களால்தான் நடக்கின்றன. மனிதனும் கால்களால்தான் நடக்கின்றான். ஆனால் மனிதனைக் கால்நடை என்று கூறுவதில்லை? ஏன்? மனிதன் கால்களால்