பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

424

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அகத்தியத்தில் சில பகுதிகளே கிடைத்துள்ளன. இந்த இலக்கிய இலக்கணங்களைப் படிக்கின்றபொழுது தமிழர் நாகரிகம் எவ்வளவு சிறப்புற்றோங்கியிருந்தது என்று அறிந்து கொள்ள முடிகிறது. அன்பின் வழி நின்ற வாழ்வு, வாய்மை நெறி நின்ற ஒழுக்கம், சத்துவக்கும் இன்ப நுகர்ச்சி, புலனழுக்கற்ற வாழ்வு, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற விரிந்த நோக்கு, பிறவாமை தரும் பெரு நெறிபற்றி நின்ற கொள்கை முதலிய இவை போல்வன தமிழர் நாகரிகத்திற் சிலவாம்.

இத்தமிழ் நாகரிகம் எகிப்தியர், சுமேரியர், ஆகிய நாகரிகங்களுக்குச் சமகாலத்ததாகவும், சற்று முன்னோடியாகவும் கூட இருந்திருக்க வேண்டும் என்று நம்புவதற்குரிய சான்றுகள் கிடைத்துள்ளன. மேலும், தமிழின நாகரிகமே இன்றைய உலக நாகரிகத்திற்கும் பண்டைய உரோம, கிரேக்க வட இந்திய நாகரிகங்கட்கும் முன்னோடியாய் இருக்கக் கூடும் என்று பழம்பொருள் ஆராய்ச்சிக்காரர்கள் கருதுகின்றனர். எனவே, உலக நாகரிகம் பலவற்றிற்கும் தாய்மை நிலை பெற்றது தமிழ் நாகரிகமே ஆகும்.

பிறவா நெறி

தமிழருக்கு மறு பிறப்புக்களிலும் வினைத் தொடர்ச்சியிலும் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. இதைச் சங்க இலக்கியங்களும் சிறப்பாகத் திருக்குறளும் தெளிவாக விளக்குகின்றன. தமிழர் பிறப்பிறப்புக்களால் விளைகின்ற இன்ப துன்ப நுகர்ச்சிகளுக்கு அஞ்சியவர்களாய் அதற்குக் காரணமாக இருக்கின்ற பிறப்பையும் கூடப் பேதமை என்று குறிக்கலாயினர். மீண்டும் பிறவா நெறியே தமிழர் விரும்பியது. ‘வேண்டும்கால் வேண்டும் பிறவாமை’ என்று திருவள்ளுவர் வேண்டுகின்றார். இப்பிறவாமையின் பாற்பட்ட வேட்கையும் வினைநீக்கத்தின் விழைவும் தமிழர்களைச் சிறந்த சமய வாழ்வுடையவர்களாக ஆக்கியது. தமிழ்