பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

426

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சித்தாந்தக் கொள்கையானது தொன்மை நலம் பல அமையப் பெற்றது. இதுவே பழந் தமிழர்களின் சமய நெறியாகும். அணிபெற அமைந்த சமயமாயும் நம்பிக்கைக்கும் நல்வாழ்க்கைக்கும் எடுத்துக்காட்டாக அமைந்த சமயம் ஆகும். இந்தியா முழுவதிலும் கூட சைவ சித்தாந்தமே இந்தியர் நினைவின் சீர்மைக்கும் உயர்தர வாழ்க்கைக்கும் எல்லையாகும் பெருமை படைத்தது என்பதே. இக் கருத்தையே தமிழ் மறைகள் சைவத்தின் மேற்சமயம் வேறில்லை என்றும், சைவ சித்தாந்தமே சித்தாந்தம் என்றும் தமிழர் நெறி முடிந்த முடிபு என்றும் சாற்றுகின்றன. பிற மொழி நாகரிகக் கலப்பிற்கு முன்னர்த் தமிழர் கடவுட் கொள்கைக்குத் திருநெறி என்றும் சிவநெறி என்றும் அருள் நெறி என்றும் பல பெயர்கள் வழங்கி வந்தன. திருநெறிய தமிழ் என்றும் நன்மை பெருகும் அருள் நெறி என்றும் வரும் தெய்வத் திருமறைகளின் வழக்கைக் காண்க. கடவுளுக்குச் சிறந்த தமிழ்ப் பெயராய் நன்மை, நேர்மை, தூய்மை, கருணை, செம்பொருள், இன்பம், மங்களம் என்ற பல பொருள் பயக்கும் சிவம் என்ற சொல் வடமொழிக் கலப்பிற்குப் பின் சைவம் என்றாயிற்று. எனவே, தமிழர் வாழ்வோடு வாழ்வாகத் தொடங்கி-தோய்ந்துகிடந்து வளர்ந்து வாழும் சமய நெறி சிவ நெறியேயாகும்.

அகமும் புறமும்

மனித இனத்தின் வாழ்வு, அகமும் புறமும் ஒருங்கியங்கி நினைக்கின்ற நினைப்பு செய்கின்ற செயல்களே நல்லின்பம் தருவனவாகவும், நிலை பேறுடையனவாயும் இருக்கும். அகமும் புறமும் ஒருங்கு இயையாதவைகள் சிலகால அளவே நின்று, குறைவுடைத்தாய இன்பமே நல்கும். சிற்சிலபோது இதனால் துன்பங்களும் விளைவதுண்டு. அதனால் அகத்திலே எழும் உணர்ச்சிகளைப் புறத் தோற்றத்திற்கும் பொறிகளின் நுகர்ச்சிக்கும் உரிய முறையில் ஒலி