பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

433



ஏன் தயக்கம்? தயக்கத்தைத் தூரத் தள்ளுங்கள்! தூக்கத்தை விடுங்கள்!

“சிரத்தைக் கொள்ளுவோம்! தன்னம்பிக்கையுடன் எழுந்து நடப்போம்! பலமே வாழ்வு; பலவீனம் மரணம்!”

-எனும் விவேகானந்தர் வாக்கு நமக்கு வழிகாட்டுவதாக!

56. [1]வாழ்க்கை நெறி – கார்ல் மார்க்ஸ் சிந்தனைகள்


1. மாற்றமும் வளர்ச்சியும்

கார்ல் மார்க்ஸ் ஒரு மாமேதை. பிறவிச் சிந்தனையாளர்; பலர் திறமைசாலிகளாக இருக்கலாம். ஆனால், சிந்தனையும் அறிவும் இருக்காது. திறமையைக் கொண்டே காலத்தைக் கடத்துவர் ஆனால், மார்க்ஸ் சிந்தனையும் திறனும் உடையவர். மார்க்சுக்கு முன்பு வாழ்ந்த தத்துவஞானிகள் பலர் உலகம் எப்படி இருந்தது? எப்படி இருக்கிறது? என்று எழுதினார்கள். வறுமையின் கொடுமையைப் பாடிவந்த தலைமுறைகள் பல உண்டு! எந்த ஒரு தத்துவ ஞானியும் உலகம் எப்படி இருக்க வேண்டும்? வேண்டிய மாற்றங்கள் என்ன? என்று கூறவில்லை! உலகம் எப்படி இருக்கிறது என்பது பலரும் அறிந்த செய்தியே! இதை எடுத்துக்கூற, தத்துவ ஞானியா வேண்டும்? உலகம் எப்படி இருக்க வேண்டும்? அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? உலகத்தில் உள்ள குறைகள் என்ன? குற்றங்கள் என்ன? இவற்றில் எத்தகைய மாற்றம் வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். மாற்றமும் வளர்ச்சியும் ஒன்றையொன்று தழுவியன. மாற்றங்கள் இல்லையேல் வளர்ச்சியில்லை.


  1. சிந்தனை மலர்கள்