பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

476

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பார்ப்பதற்கு உரிமை உண்டு என்பதை மறந்துவிடுகின்றோம். பசுவைக் காயவைத்துக் கறந்து வாழ்வோரும் உண்டு. அதுபோல அன்புப் பசுவைக் காயவைத்து வாழ முயல்வது வறண்ட பாலைவனத்தில் தளிரைத் தேடியது போலாகும்.

உடைமைகள் இல்லையே என்று உடைமையற்றவர்கள் ஏங்குகிறார்கள். உடைமை உடையவர்கள் காப்பதற்கு ஆளில்லையே என்று கலங்குகிறார்கள். இஃதொரு விநோதமான வறுமை. அதனாலன்றோ இன்றைய செல்வத்தில் மூன்றில் ஒரு பங்குக்குக் குறையாத விழுக்காடு காவலுக்கென்று செலவழிக்கப்படுகிறது. எங்கும் எதிலும் அன்பு முத்திரைக்குப் பதில் காவல் முத்திரைகள் இடம் பெற்றுள்ளன. எந்தையும் தாயும் எழுந்தருளியுள்ள திருக்கோயிலே இன்று கண்காணிப்புக்கும் காவலுக்கும் ஆளாகியிருக்கிறது. எல்லா நாட்டு அரசுகளும் படைகளுக்கென்று ஒதுக்கும் பெருந்தொகை, மானிடசாதியின் பஞ்சத்தை மாற்றவல்ல பெருந்தொகையாகும். ஒருபுறம் படைப்பெருக்கும். பிறிதொருபுறம் பஞ்சத்தின் வளர்ச்சி. பொதுவாக நாட்டில் இன்று பஞ்சம், உடைமைகளுக்கன்று. அன்பு கலந்த உறவுக்கே பஞ்சம்! உடைமை உணர்வு பூதாகாரமாக வளர்ந்திருக்கின்றது. அஃது உறவுக்குப் பதில் பகையை வளர்த்து வளர்கிறது. தொன்மைக் காலத்தில் உடைமையுரிமை நடைமுறை நிர்வாக நலன் கருதியே தோன்றிற்று. உடைமையுரிமை உடையவர்களே அனுபவத்திற்கும் உரியவர்கள் என்பது பொருந்தாத நெறிமுறை. பெரும் பொருள் பெற்றுவந்த பெருஞ்சித்தனார், “ஏற்றுக உலையை, ஆக்குக சோறே!” “என்னோடும் சூழாது எல்லார்க்கும் கொடுமதி மனைகிழவோயே!” என்று கூறினார். ஏன்? செந்தமிழ் உலகம் “செல்வத்தின் பயனே ஈதல், துய்ப்பேம் எனினே தப்புந பலவே” என்றும் முடிவு செய்தது.

எந்த உடைமை இருந்தாலும் அல்லது இல்லாது போனாலும் கவலையில்லை. மனிதன் மகிழ்ச்சியோடு வாழ