பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

492

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கால – நிகழ்கால – எதிர்காலப் பிரதிபலிப்புகளின் எதிரொலியாகவே இயங்குகிறது. ஆதலால், மனக் குறைக்கும் மனக் குற்றத்திற்கும் ஒரு மனிதனே பொறுப்புடையனாதல் இல்லை. அவனுடைய அகச் சுற்றமாகிய குடும்பமும், அகப்புறச் சுற்றமாகிய கல்வி உலகமும், புறச் சுற்றமாகிய சமுதாயமும் மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றன. மனம், நனவுப் பகுதி – நனவிலிப் பகுதி என இரண்டு பகுதியாக இயங்குகின்றது என்று அறிஞர்கள் ஆராய்ந்து கூறியுள்ளனர். இதனையே புற உள்ளம், அகவுள்ளம் என்று அழைக்கின்றோம். வேறு சிலர் மனம், அடிமனம் என்பர். மனம் எளிதில் உணர்ச்சிவயப்படுவது அடிமனம் ஆராயும் இயல்பினது. தேர்தலும் தெளிதலும் அடிமனத்தின் இயக்கங்கள். அடிமனம் அழிவற்றது. அங்கேயே புலன்களின் பதிவுத் தொகுதிகள் செயற்படுகின்றன. அடிமனம் நினைவின் களஞ்சியம். நாள்தோறும் தம்மை நாடுவோர்க்குக் குறை நீக்கி முறை நல்கும் நீதித்தலம். அடிமனத்தின் குரலைத்தான் அண்ணல் காந்தியடிகள் அந்தராத்மாவின் குரல் என்றார். அடிமனத்தையே தான் கிராமிய வழக்கில் ‘மனசாட்சி’யென்று குறிப்பிடுகின்றோம்; உயிராற்றலும் திருவருளும் கூடிக் கலந்து மகிழும் இடமும், அடிமனமேயாம். அடிமனமே மனிதனை முழு மனிதனாக்கும் படைப்பாற்றல் உடையது.

“நினைத்துப் பார்!” “எண்ணிப் பார்!” “நீ நாளும் நினையாய்!” “பரிசீலனை செய்க!” என்றெல்லாம் கோரிக்கைகள் வைக்கப் பெறுவது அடிமனத்தின் முன்னாலேயாம். அடிமனத்திற்கு வேலை கொடுக்காதவன் அரை மனிதனாகி விடுகின்றான். அதனாலேயே ஆளுமையுடைய மனிதனுக்கு இலக்கணம் வகுக்கும் பொழுது “தேரான் தெளிவும், தெளிந்தான் கண் ஐயுறவும்” என்று திருவள்ளுவர் மொழிந்தார்.

மேல் மனத்தை ஆசைகள் இயக்கும். அடிமனத்தை அறிவு இயக்கும். மேல் மனத்தைப் பாசங்கள் பற்றும்.