பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/551

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்துறைக் கட்டுரைகள்

535


வேண்டும் – நாடு முழுவதும் செல்வத்தால் செழிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வது பாவை நோன்பு. பாவை விழாவைத் தொடர்ந்து நடைபெறும் விழா பொங்கல் விழா!

பொங்கல் திருநாளை முன்னிட்டு வீடுகள் புதுக்கப் பெறும். வண்ணச் சுண்ணாம்புச் சாந்துகள் பூசப்பெறும். பழகிப் பயனற்றுப் போன பழைய பொருள்கள் கழிக்கப் பெறும். புதிய பொருள்கள் வாங்கிச் சேர்க்கப் பெறும். பொங்கல் விழா நல்வாழ்விற்குரிய அடிப்படை முயற்சிகளிலே தொடங்குகிறது. நோயின்றி நெடிது நாள் வாழ வீட்டின் அமைப்பும், சுகாதார வசதியும் அவசியமானவையாகும். அதுபோலவே, பழைய கழித்தலும் புதியன கொள்ளுதலும் தேவை. இது வீட்டிற்கு மட்டுமா? ஆழமாகச் சிந்தித்தால் உயிரியல் வாழ்க்கைக்கும் பொருந்தும், நாளுக்கு நாள் உலகம் வளர்கிறது? பரு உலகமும் வளர்கின்றது – கருத்துலகமும் வளர்கிறது! மனிதன் ஒரு சிந்தனைப் பிராணி, சிந்திக்கின்ற மனிதன் ஒரு வற்றாத ஊற்றைப் போல, புத்தம் புதிய கருத்துக்கள் தோன்றிக் கொண்டேயிருக்கும். காலத்தின் வளர்ச்சி கருத்தின் வளர்ச்சியோடு இணைந்தது. வளரும் புதிய கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்கேற்ப வாழ்க்கையைத் திருத்தி அமைத்துக் கொள்ளவும் வேண்டும். இது வாழத் தெரிந்தவனின் நெறி முறை. அதனாலன்றோ, ஊனெலாம் நின்றுருக ஆட்கொள்ளும் திருவாசகம் தந்த மாணிக்கவாசகர் இறைவனைப் பார்த்து ‘முன்னைப் பழமைக்கும் முன்னைப் பழமையதாய்ப் பின்னைப் புதுமைக்கும் பெயர்த்துமப் பெற்றியனாய்’ விளங்குகிறாய் என்று பாடுகின்றார். இங்கு, பழமை – புதுமை என்பன காலத்தோடு பட்டன அல்ல. வாழ்க்கைக்குப் பயன்படும் பெற்றிமை நோக்கியதேயாகும். வீட்டில் உள்ள பழைய – பயன்படாத பொருள்களைக் கழிப்பது போலச் சமுதாய வளர்ச்சியில் நேற்றையத் தேவையின் பேரில் தோன்றிய –