பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/555

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்துறைக் கட்டுரைகள்

539


பின் நன்றாகக் காய வைக்கிறோம். பின்னர் அதை மீண்டும் தண்ணிரில் நனைத்தே சோறாக்குகிறோம். அதுபோலவே ஆன்மாக்களை அன்பில் நனைத்து நனைத்துப் பையப் பையப் பக்குவப் படுத்தும் முயற்சியும் ஆகும். அரிசி சோறாக மாறப் பயன்படும் தண்ணிர் வீணாக்கப் பெறாமல் பொங்கப் பெறுவதற்குப் பொங்கல் என்று பெயர். அதுபோலவே, மனித ஆற்றலைத் தப்புக் கணக்குகள் காட்டி வீணாக்காமல் வைத்து வளர்த்துப் பண்படுத்துவதே பண்பான காரியம்.

புதிய பானை பொங்கலுக்குத் தேவை. அது போலவே, மனித வாழ்க்கையின் இணைப்புக்கும் மகிழ்ச்சிக்கும் புதிய மனம் தேவை. சென்றதை நினைந்து கவலையில் ஆழ்தலோ, சென்றதை நினைந்து குத்திக் குறைக்காட்டுதலோ நல் வாழ்க்கைக்கு உரியனவல்ல. அதனால்தான் போலும்.

‘நன்றல்ல தன்றே
மறப்பது நன்று’

என்று தமிழ்மறை பேசியது. நன்றல்லாதன நிகழக் கூடும். பரந்துபட்ட உலகில் அது தவிர்க்க முடியாததும் கூட, எனினும் அதை மறப்பது மனிதனுக்கு இயற்கையாக அமைய வேண்டிய விழுமிய பண்புகளுள் ஒன்று. நிலத்தோடு பட்ட குப்பை எருவாகி ஆக்கத்திற்குப் பயன்படுதல் போல, பிறர் செய்யும் நன்றல்லாதனவற்றையும் அன்போடு பொறுத்துக் கொண்டு அவர்தம் குணத்தைத் திருத்தமுறவும், ஆக்கத்திற்குப் பயன்படும் வண்ணமும் மாற்ற முயற்சிக்க வேண்டும். புதிய பார்வை வராத வகையில் பகை மாறாது - நட்பு வளராது. ஆதலால் அடுப்பில் புதிய பானையை ஏற்றுதல் போலவே புதிய பாவனையையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பொங்கலன்று பொங்கற் சோறு பொங்குதலில் மரபுகள் பல உண்டு. சாதாரணமாக, தண்ணீர் வைத்தே - சோறு பொங்குதல் இயற்கை அன்று மட்டும் பால் ஊற்றிப்