பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/556

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

540

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பொங்கவைத்துப் பின் தண்ணீர் ஊற்றிப் பொங்கல் வைப்பார்கள். உலகில் தூய்மையின் சின்னமாக - தூய்மைக்கு அடையாளமாகப் பேசப் பெறும் பொருள்கள் இரண்டு. ஒன்று திருநீறு - மற்றொன்று பால், புதிய பாவனை அல்லது பார்வை மட்டும் போதாது. பார்க்கும் மனம் திரீபு இன்றித் தூய்மையான நன்னெஞ்சத்துடன் வாழ்க்கையைத் தொடங்க வேண்டும். ஒருவரைப் பக்குவப்படுத்த முயற்சிப்பவன் அவன் தேறமாட்டான் என்ற மாறுபட்ட உணர்வுடன் கூடிய முடிவோடு முயற்சிப்பானாயின் அம் முயற்சி தோல்வியிலேயே முடியும். திருத்த முறல் என்பது ஒருபால் ஆற்றலுக்கு மட்டும் உட்பட்டதல்ல. இருபால் ஆற்றலுக்கும் உட்பட்டது. பயிர் செழித்து வளர வித்தின், இயல்பும் நன்றாக இருக்க வேண்டும். அது தொடர்பு கொள்ளும் நிலத்தின் இயல்பும் நன்றாக இருக்க வேண்டும். இந்தப் புதிய சிந்தனையோடுதான் புதுப்பானையில் பால் ஊற்றும் நிகழ்ச்சியைத் தொடங்கியிருக்கிறார்கள். பால் பொங்கி பானை நிரம்பி வழிகிறது. சுற்றி நிற்பவர்கள் 'பொங்கலோ பொங்கல்' என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறார்கள். பானையில் பால் பொங்கினால் மட்டும் போதாது. மக்கள் மனத்தில் மகிழ்ச்சியும் பொங்கி வழிய வேண்டும்! இரண்டும் நிகழும் பொங்கல் நாளே உண்மையான பொங்கல் நன்னாள். பானையில் பால் பொங்க வைத்தல் எளிய முயற்சி! மனித மனத்தில் மகிழ்ச்சி பொங்கச் செய்தல் அரிய முயற்சி!

இந்தப் பொங்கற் புது நாளில் அந்த அரிய முயற்சிகளைப் பற்றிச் சிந்தனை செய்தலும் செயல் திட்டங்கள் அமைத்துக் கொள்ளுதலும் அவசியம்!

வாழ்க்கை அன்பு காட்டுதற்கென்றே அமைந்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நாம் அமிழ்ந்திருக்கும் பிறவிப் பெருங்கடலில் தம்மை அமிழ்த்திக் கொண்டிருக்கும்