பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆட்சி செய்கிறதோ, அங்கு தனி மனிதன் மற்றவர்களோடு மோதுதலே செய்வான்.

மனிதன் தனி ஒரு தீவு அல்ல. பல நீர்த் திவலைகளை உள்ளடக்கிய ஏரி அனையவன். மனிதனிடத்தில் ஒப்படைக்கப் பெற்றுள்ள வைப்பாகிய ஆற்றல், அறிவு, கருவிகள் அளப்பில; ஆனால் மனிதன் இவற்றை முழுமையாக நேற்றும் பயன்படுத்தவில்லை! இன்றும் பயன் படுத்தவில்லை! அது மட்டுமா? அவன் இயற்கையாகப் பெற்ற பெரும் வைப்புக் கருவிகளில்-திறன்களில் சிலவற்றை அழித்தும் கெடுத்தும் இருக்கிறான். மனிதன் பல தவறான திருப்பங்களை எடுத்து வாழ்க்கையின் இலக்கிலிருந்து நெடுந்தொலைவு விலகிச் சென்றுவிட்டான்! இயற்கையோடு இசைந்து வாழ்ந்து முன்னேறிச் செல்லாமல் இயற்கையோடு முரண்பட்டுத் துன்பத்தையும் அதிகமாகத் தேடிக் கொண்டு விட்டான்! இந்தத் தவறு நிகழ்ந்ததற்குக் காரணம் மனிதன் கூடிச் சிந்தனை செய்து, முடிவு எடுக்கும் மரபைக் கைவிட்டதுதான்! மனிதனின் கூட்டுச் சமூக வாழ்க்கையில் நாள்தோறும் கூட்டு ஞானத்தைக் கண்டு வளர்த்துக்கொண்டு பயனடைதல் வேண்டும்.

சமுதாய உணர்விலும் சமுதாய ஒழுக்க நலத்திலும் சிறந்து வளர்ந்தால்தான் அன்பு வளரும். அன்பினால் சமுதாயம் உருவாவதில்லை. சமுதாய உணர்வின் செழிப்பில் தான் அன்பு வளர்கிறது. சமுதாய நலஞ்சார்ந்த வாழ்க்கையில் தான் வெறுப்புக்கு மாற்று-மருந்து அன்பு ஒன்று ஆகும். இத்தகு சமுதாய நலங்காணும் வாழ்க்கையில்தான் பொறை யுடைமை, மன்னித்தல், துன்பம் செய்யாமை, அகிம்சை ஆகிய பண்புகள் நிலவும்.

இன்று நம்முடைய வாழ்க்கை சிறப்பாக அமைய உடனடியாகச் சமுதாய உணர்வும், அறிவும் தேவை. சமுதாய அமைப்புமுறைக் கட்டுமானத்தை-உருவாக்குவதே