பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இவ்வாறான சமுதாய இணக்கம் ஏற்பட்டால்தான் மனிதகுலத்தின் பொது எதிரிகளாகவுள்ள அறியாமை, வறுமை, ஏழ்மை, வேறுபாடுகள், பகைமை, போர் இவைகளை எதிர்த்துப் போராட முடியும். மனிதகுலம் தழுவிய இந்தப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களே மாமனிதர்கள்! மதிப்பிற்குரியவர்கள்! புகழுக்குரியவர்கள்! மனித சமுத்திரத்திற்குள் மூழ்கிக் குளித்து மனிதகுல மேம்பாட்டையே தவமாகச் செய்யும் தவமே, தவம்! அறம்! மனிதகுலத்தின்பால் காட்டும் பெருந்தன்மையே ஒழுக்கம்!

இத்தகு மனிதகுல ஒழுக்கத்தை அறிவு நிலையிலும் செயல்நிலையிலும் வளர்க்க, கூட்டுறவு சமுதாய அமைப்பு மிகுதியும் துணை செய்யும். நாம் நம்முடைய மனிதகுல மேம்பாட்டுக்காக ஒரு புதிய சக்தியைத் தோற்றுவிக்க இயலாது. முடியாது. ஆனால், மனிதகுலம் உயர்ந்த இலட்சியங்களின் அடிப்படையில் ஒருமை உணர்வுடன் ஒன்றுபட்டால், கூடித் தொழில் செய்து வாழத் தலைப்பட்டால் ஒரு புதிய சக்தி தோன்றும்! இந்த அற்புதமான மனிதக் கூட்டுறவு சக்தி, படைப்பாற்றலுடையதாக விளங்கும். இந்தியாவின் மேடு பள்ளங்கள் நில அமைப்பில் மட்டுமல்ல, மனிதர்களிடையும் கூட இருக்கிறது. இந்த நிலை மாறி, எல்லாரும் எல்லாம் பெற்று இன்புறு நலன்களுடன் வாழ்ந்திடக் கூட்டுறவு வாழ்க்கையே சிறந்தது! “கூட்டுறவு” என்ற சொல்லைச் சிந்தனை செய்யுங்கள்! அது, கூட்டு வாழ்க்கையல்ல! கூட்டு வாழ்க்கை போதாது! வாழ்க்கையின் தேவைகள் நிறைவுற்ற நிலையிலும் வேறுபாடுகள் தோன்றியபோதும் சுயநலம், தன் மதிப்பு அடிப்படையில் கூட்டு வாழ்க்கை சிதையும். இங்கு தேவை கூட்டுறவு வாழ்க்கை உறவு அடிப்படையில் மலரும் வாழ்க்கை! இங்குக் குறிப்பிடப்பெறும் உறவு, சுற்றத்தின் வழிப்பட்ட உறவு மட்டுமல்ல. “யாதும் ஊரே, யாவரும் கேளிர்!” என்ற அடிப்படையில் கால்கொள்ளும் உறவு! உலகம் உண்ண உண்ணும் உறவு! உலகம் உடுத்த உடுத்தும்