பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

342

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



166. உயர்வும்! தாழ்வும்!

வேலையில் உயர்வும் இல்லை; தாழ்வும் இல்லை!
எந்த ஒரு பெரிய மனிதரும்
தமக்குக் கிடைத்த வேலையை அது எந்த வேலையாக
இருந்தாலும்
தாழ்வெனக் கருதார்.
நாட்டுத் தலைமையாக இருந்தால் என்ன?
வாழைத் தோட்டத்தின் பணியாக இருந்தால் என்ன?
கிராம நிதிச் சபையின் உறுப்பினராக இருந்தால் என்ன?
பதவிக்குப் பெருமை பதவியால் அல்ல
பதவியில் அமரும் மனிதனைப் பொருத்தே
பதவிக்குப் பெருமை!
வாழ்க்கை என்ற குன்றின் படிகளைக் கடந்து ஏறு!
கடின உழைப்பு, அடக்க முடைமை
வாழ்க்கையை உயர்த்தும் படிகள்!
மனிதனாக இருப்பது
அடக்கமுடையோனாக விளங்குவது
பயத்தால் அல்ல!
பண்பாட்டின் விளைவேயாம்!
மனிதம் மிளிர வாழ்தலே வாழ்தல்!
எப்பணியாயினும் ஏற்றுச் செய்து
உனக்கு வாய்த்த பணியைப் பாங்குடன் செய்க!
மேலே ஏறு! மேலே ஏறு!