பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

348

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



172. ஏன் எதிர்மறை எண்ணம்?

மனிதன் தனது கற்பனைகளைக் கண்காணிப்பானாயின்
அவன் பல துன்பங்களைத் தவிர்த்து விடுவான்!
மனிதனுக்கு மகிழ்ச்சி தருபவைகளைவிடத்
துன்பம்தரும் வாயில்கள் மிகுந்துள்ளன.
பயங்கரமான கற்பனைகள்
இருண்ட ஆபத்துக்களையும்
உண்மையே யல்லாத சுமைகளையும் தரும்.
அவை பயமூட்டும்; வெறுப்பூட்டும்!
நடப்பவைகளை - நடக்க இருப்பவைகளை
நல்லவையாகவும் பார்க்க வேண்டாம்;
தீயவையாகவும் பார்க்க வேண்டாம்.
சில மனிதர்களுக்குத் தொல்லைகள் உண்டு
துயரங்கள் உண்டு
ஆனாலும் அவற்றை அவர்கள் அறியார்
மற்றவர்களின் துன்பத்தை அறிந்து மாற்றுவர்!
ஆண்டுபல வாழ்ந்த நான்,
பல பெரியதுன்பங்களைக் கற்பனையில் கண்டதுண்டு!
ஆனால்,
அவற்றில் பல என்னை வந்தடையவில்லை!
வாழ்க்கை நீர்க்குமிழி போலத்தான்!
ஆனாலும் நனி நல்லது; நனிநல்லது.
கற்பனையில் துன்புறுவதைத் தவிர்த்திடு;
ஆனால், அவை என்றும் வரா!
ஏன் வாழ்க்கைக்கு எதிர்மறை எண்ணம்?