பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

352

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


176. நேருக்கு நேர்

சுற்றி வளைக்காதே!
வளைந்து வளைந்து வம்பு செய்யாதே!
நேருக்கு நேர் கண்டு பேசுவதில் நன்மைகள் உண்டு.
உன்னைப் பிரிந்தவனையும் கூட
நீ நேரில் காண்க! பேசத் தலைப்படுக!
அங்ஙனம் பேசுதல் இதமாக இருக்கும்!
பிரிவின் இடைவெளி குறையும்!
கண்டபொழுது புன்முறுவல் அரும்பும்!
கருத்து ஏதும் இல்லையெனினும்
ஆழமான பேச்சு தோன்றும்
நேரிடையான அணுகுமுறை சோதனை செய்யப் பெற்றது.
இம்முறை சகிப்புத் தன்மையை வளர்க்கும்
நேரிடையான உறவுமுறைப் பயிற்சி
மேலும் மேலும்
பொறுத்தாற்றும் பண்பையே வழங்கும்
ஒருவர் மற்றவரைப் புரிந்து கொண்டால் மட்டும் போதாது!
தன்னைப் புரிந்து கொள்ளவும் வேண்டும்
ஒருவரையொருவர் அறிந்து பழகும் பண்பால்
வேற்றுமைகள் சுருங்கும்!
ஏன்? உன் உணர்வால் மதிக்கப்படும்
பெரியோர் முன் சிறுமை ஏது?
மற்றவரை மதித்தல் மனிதனுக்குரிய சிறப்பு!
இதனால்,
ஒருவரையொருவர் தழுவி வாழலாம்!
ஒருவரில் ஒருவர் கண்ணோட்டம் - பரிமாற்றம் பெறும்!
இவர்கள் பயணத் தடத்தில் முட்புதர்கள் இல்லை!
எடுத்தெறியும் கொம்புகள் இல்லை
உன்னுடைய குறை உன்னைச்சார்ந்தோர் முகத்தில்
தெரியும்!
அப்போது உனக்கு வாய்ப்புக்கள் அதிகம்!
உன் செயல்கள் ஊக்குவிக்கப்படாது போனாலும்
உன் குறிக்கோள் ஊக்குவிக்கப்படும்!