பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

409


228. விதியே! விதியே! போ, யோ!

விதியே, விதியே! உனக்கு உவமை இல்லை!
ஆயினும் உன்னுடைய விளம்பர முகவர்கள்
உன்னை 'ஆகா, ஊ' என்று
உன் வலிமையைப் பெரிதுபடுத்துகின்றனர்!
ஆயினும் நின்வலி
அயர்விலா உழைப்புடையாரிடம் செல்லுமா?
நாளும் தாழ்விலா முயற்சியுடையார் மாட்டு
நின்வலி செல்லுபடி யாகாது!
அயர்வும் சோர்வும் சோம்பலும் உன்முன்
தாளிட்டுப் பணியும்!
விதியே! விதியே!
நீ, இந்த நாட்டுமக்களைக் கெடுத்தது போதாதா?
இன்னமும் ஏன் திருவிளையாடல்?
வளம் கொழிக்கும் நாட்டில் வறுமை...?
உனக்குப் பயந்தோர் சிலர்
உழைப்புத் தேவியைச் சரணடையாமல்
கண்டகண்ட தெய்வங்களிடம் சரணடைகின்றனர்
விதியே! விதியே! போ, போ!
வந்தால் ஆகூழாக வா!
இல்லையெனில் வேண்டாம்!
துன்பங்களும் துயரங்களும்
சாதனைக்குரிய படிக்கற்கள் எனக் கொண்டேன்!
சுகம் காணும் விழைவு இல்லை!
அறிவறிந்த ஆளுமையே என்செல்வம்!
நாட்டிற்குழைத்தலே என்தவம்?

கு.XIV.27