பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4. யானையும் புலியும்

யானை உருவத்தில் பெரியது. யானை, கூர்மையான தந்தங்களைப் பெற்றிருக்கிறது. ஆயினும், யானைக்கு ஊக்கம் குறைவு. காட்டில் யானை ஒரு புலிக்குட்டியைக் காண நேரிட்டது. ஐயோ, பாவம்! யானை, பெரிய யானை! புலி, குட்டி! ஆனால், புலிக்குட்டியைக் கண்டவுடன் யானை பயந்தது! ஏன்? புலிக்குட்டிக்கு ஊக்கம் உண்டு மேவிச் செல்லும் மேற்செல்லும்! அஞ்சாது சென்று தாக்கும்! யானைக்கோ ஊக்கமில்லை! சுறுசுறுப்பு இல்லை! எளிதில் காரியங்களைச் செய்ய இயலாத பருத்த உடம்பு! அதனால் புலிக்குட்டியைப் பார்த்து யானை பயப்படுகிறது - வினோதமாக இல்லை?

மனிதர்களிலும் அப்படித்தான் பலர்! வாட்ட சாட்டமான உடம்பு இருக்கும். முறுக்கின. மீசை கூட இருக்கலாம்! கொழுத்த சொத்துக் கூட இருக்கலாம். இந்தச் சொத்து, ஊக்கத்துடன் சம்பாதித்த சொத்து அல்ல! பரம்பரையாக வந்தது! சராசரி மனிதன்! எளியவன்! ஆனாலும் ஊக்கமுடையவன்! உழைப்பாளி! உலகம் யாரைப் போற்றும்? உழைப்பாளியைப் போற்றும்! பயமற்றவனைப் போற்றும்! ஆதலால், வளமான கொழுத்த உடலைவிட, வலிமையான உடலே தேவை! ஓய்ந்து உட்கார்ந்திருத்த லாகாது. ஊக்கம் கொள்ள வேண்டும்! சுறுசுறுப்பாக ஊக்கத்துடன் உழைத்திடுதல் வேண்டும். அப்போதுதான் பயமின்றி வாழலாம்! ஊராண்மை மேற்கொள்ள இயலும்!

"பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெருஉம் புலிதாக் குறின்"

(குறள் - 599)