பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியரங்கக் கவிதைகள்

47


குளிரும் தென்றல் குணத்தினைப் பெற்றுத்
தோன்றும் நிறைமைக் காதலில் சுடரும்
அறிவா ராய்ந்த அணிநல உணர்வொடு
ஆரத் துய்த்திடின் அன்புறு மக்கட்
பேற்றினைத் தருமெனப் பேசினேன்! மேலும்
மங்கல மனையின் பயன்நன் மக்கட்
பேறென மொழிந்தான். பெருமையார் குடும்பம்
இஃதெனும் இனிய பெயர்எப் படியோ
கூடிவாழ் வதனால் கூடுவ தில்லை!
கொழிக்கும் செல்வச் செழிப்பிலும் இல்லை;
தொடக்க வாழ்வில் சூழ்வதும் இல்லை;
சிலபல ஆண்டுகள் சென்று மனையறப்
பரிசிலாய்த் தோன்றிய நன்மகப் பேற்றினைக்
கண்டபின் அன்றோ நந்துவ தாகும்.
என்னோற் றான்கொல் இவன்தந் தையென
இசைத்திடும் வள்ளுவன் எழில்மொழி சான்று!
சென்றன சென்றன வாகுக! இனிமேல்
ஓர்ந்தும் உணர்ந்தும் வாழுமின் உலகீர்!
வள்ளுவன் கண்ட நன்மகன் வழங்கி
நாடு புகழ்பெற நல்லறஞ் செய்ம்மின்!
நாடிய அறம்பல வற்றிலும் நன்மகன்
தந்தையா வதூஉம் தாயா வதூஉம்
பேரற மாகப் பிறங்கிடும் காண்க!
இத்தகு நன்மகன் இயல்பினை சத்தியைச்
சரணம் அடைந்த சந்தக் கவிஞர்
உளத்தினை உருக்கிடும் உயர்கவி பொழியும்
சத்தி சரணன் சத்துள தமிழில்
பாடுவர் கேட்போம்; பயன்மிக வுறவே!