பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

309


அம்மன்னனுக்கு நல்லுணர்வு கொளுத்துகின்றார். “யாருக்கும் தாழாத கொற்றக்குடை தாழ்க!” என்று கூறுகின்றார். ஆம். “மன்னவர்க்கெல்லாம் மன்னவனாக, பிறவா யாக்கைப் பெரியோனாக விளங்கும் முக்கட் செல்வரின் திருக்கோயிலை வலம் வருவதற்காகக் கொற்றக்குடை தாழ்க" என்று செவியறிவுறுத்துகின்றார்.

"பணியிய ரத்தைநின் குடையே முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே"

என்பன புறநானூற்று அடிகள். திருக்கோயில்கள் நகர மென்று நவிலப் பெறுகின்ற அளவுக்குப் பரந்து-விரிந்து-அகன்றதாக அமைந்திருக்கின்றன. கற்றவர்கள் போற்றும் கலித்தொகையிலும் "கடவுட் கடி நகர்” என்று திருக்கோயில்கள் பேசப் பெற்றுள்ளன. கடவுள் நெறியும், வழிபாட்டுணர்ச்சியும் நல்ல தெளிவினின்று உருவாகும் உயர்ந்த நெறிகள். அதனால்தான் முத்தமிழ்க் காப்பியத்தை ஆக்கித் தந்த இளங்கோவடிகள் "தெய்வந் தெளிமின்” என்று அறவுரை கூறி நம்மையெல்லாம் அருள் நெறியிலே ஆற்றுப்படுத்துகின்றார்.

இன்றைய நிலை

இன்று தமிழன்பும், தமிழார்வமும் மக்களிடையே அரும்பி மலர்ந்திருக்கின்றது. ஆனால் பழந்தமிழ்க் கொள்கைக்கு முரண்பட்ட நிலையில் ஒரு சாரார் தமிழை வளர்க்க-தமிழர் நிலையை உயர்த்தப் பாடுபடுகின்றனர். தமிழ் வேறு, சமய நெறி வேறு என்று கருதுகின்றனர். வாழ்க்கை வேறு, சமய நெறி வேறு என எண்ணுகின்றனர். தமிழருக்கே உரிய சமய நெறியினையும் பிறருடையது எனத் தவறாகக் கருதுகின்றனர். தமிழினத்தின் குருதியிலே கலந்து படிந்திருக்கின்ற சமயப் பண்பினை வேண்டாதன என்று கருதுகின்றனர். புலவர் பெருமக்களது இலக்கியங்களையெல்லாம்-தமதறிவின் திறத்திலேயே நின்று-ஒவ்வாமை